இது நண்பர்களுக்காக நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம்! -‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து

இயக்குநர் வெங்கட் பிரபுவின் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த அனுபவத்துடன் ‘மசாலா பாப்கார்ன்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவர் ஐஸ்வர்யா. அவரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கியிருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இது குறித்து, ஐஸ்வர்யா பேசும்போது, “இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தேன். தயாரிப்பு நிர்வாகத்தை சிறந்த முறையில் கற்று அனுபவம் பெற அந்த நிறுவனம் பெரிதும் உதவியது. எனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பாப்கார்ன்’ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டபோது தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன்.

தயாரிக்கும் முதல் படம் என்பது ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிறப்பானதும் மிகவும் முக்கியமானதுமாக இருக்க வேண்டும். மசாலா பாப்கார்னில், உருவாகும் படம் சிரிக்க வைக்க வேண்டும், அழ வைக்க வேண்டும், குறைந்தது ஒரு தருணத்திலாவது அந்தப் படத்தோடு ரசிகர்களை ஒன்ற வைக்க வேண்டும். அவ்வாறான படங்களைத்தான் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படியான படமாக ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ உருவாகியுள்ளது.

படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல் நட்பே எங்களை இணைத்து  எல்லாம் சரியாக நடந்தது. எங்கள் நட்பிலுள்ள நம்பிக்கையே எங்களை இவ்வளவு தூரம் கடத்திக் கொண்டு வந்து படத்தை முடிக்க உதவியது. விரைவில் படம் வெளியாக உள்ளது. மசாலா பாப்கார்ன் நிறுவனத்தின் முதல் படத்திற்காக ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைவதில் பெருமை கொள்கிறோம். படம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது, ‘‘ ‘சென்னை 28’ படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்த படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு எனக்கு அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யாவுக்கு நன்றி. இந்த படம் உங்கள் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டு தருவோம்! நண்பர்கள் அனைவருக்காகவும் நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது” என்றார்.

இயக்குநருமான ஆனந்த் பேசும்போது, “ஐஸ்வர்யா மற்றும் அவரது மசாலா பாப்கார்ன் நிறுவனம் எனக்கும், எங்கள் படத்துக்கும் கிடைத்தது மிகச் சிறந்ததாக கருதுகிறேன். எந்த ஒரு படைப்பாளியும் தன்னை முழுவதுமாக நம்பும் ஒரு தயாரிப்பாளரும், தயாரிப்பு நிறுவனமும் வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடன் நின்று சிறந்ததைச் செய்யத் தூண்டுவார்கள். தயாரிப்பாளர்  ஐஸ்வர்யா எதிர்பார்த்ததை விட எமது  தேவையை முழுமையாக நிறைவேற்றித் தந்தார்கள்.

படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது. பல அற்புதமான ஆச்சர்யங்களுடன், ஒரு சிறந்த பயணத்தை எதிர்நோக்குகிறோம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here