கன்னட நடிகர் நிகில் குமாரசாமி ‘ரைடர்’ படத்துக்கு பின் சட்டசபை தேர்தல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தேர்தல் முடிந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
தமிழின் பிரபலமான லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை பெரிய பொருட்செலவில் பான் இந்தியா படமாக தயாரிக்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி லைக்கா – நிகில் இணையும் புதிய படத்தின் பூஜை நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகில் நடிப்பது, அந்த படத்தை லைக்கா தயாரிப்பது கன்னட ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
லைகா நிறுவனம் தமிழில் ‘2.0′, ‘கத்தி’, ‘தர்பார்’, ‘டான்’, ‘PS1′, ‘PS2′ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2′, ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’, ‘ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2′ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. தற்போது நிகில் குமாரசாமி மூலம் கன்னட சினிமா துறையில் நுழைகிறது.
நிகிலை நாயகனாக வைத்து படம் தயாரிக்க லைக்கா நிறுவனம் நான்கு ஆண்டாக காத்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. நிகில் நடித்த சீதாராம கல்யாணம்’ படத்தை லைக்கா நிறுவனம் பார்த்துள்ளது. அவரது நடிப்பு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரனையும் மற்ற நிர்வாகிகளையும் கவர்ந்துள்ளது. அதுவே நிகில் குமாரசாமியை வைத்து லைக்கா நிறுவனம் படம் எடுக்க காரணமாக அமைந்துள்ளது.