கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் கானா பாட்டு… கடலில் மட்டுமே ஷூட்டிங்… பரபரப்பு கிளப்பும் சிம்புதேவனின் ‘போட் – நெய்தல் கதை.’

முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டுள்ள படம் ‘போட் – நெய்தல் கதை.’ சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தில் நாயகி நாயகனை நோக்கி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல். அதற்கு ஜிப்ரான் டியூன் போட பாடலை கர்நாடக இசையரசி பத்மபூஷன் சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளரும் இயக்குநரும் விரும்பியுள்ளனர்.

இதற்காக சுதா ரகுநாதனை அணுகியுள்ளனர். அவர் வியப்புடன் “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி! இசை என்பது ஒலி வடிவமே. நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால் நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்ப மூன்று மாதமாகும் ” என்றாராம்.

பரவாயில்லை என பட குழுவினர் மூன்று மாதம் காத்திருந்து அவர் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர். பாடலை எழுதியவர் வடசென்னையைச் சேர்ந்த கோல்ட் தேவராஜ்.

ரெக்கார்டிங் முடித்துவிட்டு தனக்கு பாடல் மிகவும் பிடித்துள்ளதாக ஜிப்ரானை பாராட்டினாராம் சுதா ரகுநாதன்.

படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறதாம். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here