திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் பாடல்கள் எழுதி இசையமைக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்.’ இந்த படத்தின் துவக்கவிழா 3.9.2023 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்க வளாகத்தில் நடந்தது. டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் , நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகரும் தயாரிப்பாளருமான நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் தயாரிப்பாளரும் இந்த படத்தின் இயக்குநருமான எம்.ஏ.ராஜேந்திரன் பேசியபோது, ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர். அனைவரும் நமது சகோதர சகோதரிகளே. நாம் இந்துவாக முஸ்லீமாக கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் முதலில் நாம் மனிதனாக இருப்போம். தமிழன் என்றாலே அது வரலாறு, என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த படத்தின் கதை மிகவும் மாறுபட்ட விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை விஞ்ஞானி, மகன் ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை.
தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன். ஆங்கிலத்தில் அவதார் 2-ம் பாகம் படம் 160 மொழிகளில் எடுக்கப்பட்டது. அதை மிஞ்சும் வகையில் 163 மொழிகளில் நான் கடைசி வரை தமிழன் படம் உருவாகிறது” என்றார்.டி.ராஜேந்தர் பேசியபோது, ‘‘ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன். அந்த திறன் இந்த இயக்குநர் ராஜேந்திரனிடம் இருக்கிறது. அவரிடம் எனக்கு பிடித்தது பிடிவாதம். நானும் பிடிவாதக்காரன்தான்.
இந்த படத்துக்கு ‘நான் கடைசி வரை தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம் ஏ.ராஜேந்திரன் சொன்னார். அவரிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க, உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க, பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க என்றேன். இல்லை சார், கடைசி வரை தமிழன் தான் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார். அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு. தமிழன் என்றால் இனிப்பு!
நான் ‘பண்ணாரி அம்மன்’ படத்துக்கு பிறகு இசையமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்த படத்துக்கு தமிழில் தலைப்பு வைத்திருக்கிறார். தலைப்பில் தமிழன் என்ற சொல்லும் வருகிறது. அதனால்தான் இசையமைக்க ஒப்புக்கொண்டேன். முருகன் என்றால் தமிழ். நான் கடைசி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது” என்றார்.
நிகழ்வில் நடிகர்கள் கராத்தே ராஜா, இமான் அண்ணாச்சி, ஆர்.கே.அன்புசெல்வன் உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினார்கள்.