காளிதாஸ் ஜெயராம் 2024 புத்தாண்டு தொடங்கியபோது, தனது சினிமா பயணத்தைப் புதிய உயரத்திற்கு உயர்த்தும்படியான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் கதாநாயகனான நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அவரது முடிவை ஸ்ருதி நல்லப்பாவின் மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க, மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.
’நிலா வரும் வேளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிப் படமாக உருவாகிறது.
தமிழில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதற்கு முன்பு ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார்.
தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா இந்தப் படம் குறித்து உற்சாகமாகப் பேசியபோது, “மிராக்கிள் மூவிஸ் எப்போதும் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பிரம்மாண்டமாக உயிர் கொடுத்துத் திரையில் கொண்டு வரவேண்டும் என அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். அதற்கு எங்களின் முந்தையப் படங்களே சான்று. இப்போது உருவாகி வரும் ‘நிலா வரும் வேளை’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். படத்திற்கான லொகேஷன், செட் வேலைகள், பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்பட ஆர்வலர்களை வசீகரிக்கும்
திரையில் வரும் நேரத்தப் பொருட்படுத்தாமல் கதாபாத்திரத் தன்மை அறிந்து நடிகர் காளிதாஸ் ஜெயராம் தரும் அர்ப்பணிப்பும் திறமையும் ஒவ்வொரு படத்திலும் தெளிவாகத் தெரிகிறது. மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் மூலம் அவருடன் இணைவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படம் சந்தேகத்திற்கு இடமின்றி சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய உயரத்தைக் கொடுக்கும். இயக்குநர் ஹரியின் தொலைநோக்கு பார்வையும் நிபுணத்துவமும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். ‘நிலா வரும் வேளை’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” என்றார்.
படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.
மிராக்கிள் மூவிஸ் ’லட்சுமி’, ’மாறா’, ’டிரிகர்’ போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.