உயர் சாதிக்காரர்களால் மறுக்கப்படும், நசுக்கப்படும் கீழ்சாதி மக்களின் உரிமைகள் பற்றி பேசிய படைப்புகள் ஏராளம்; ‘எதற்கும் சளைத்ததல்ல’ என்பதுபோல் இன்று வந்திருக்கிற ‘நாளை நமதே.’
அந்த ஊருக்கு காலங்காலமாய் அந்த உயர்சாதிக் காரர்தான் தலைவர். ஒரு கட்டத்தில் அவரை அவரது சாதிக்கார செல்வாக்கு மிக்க ஒருவர் எதிர்க்க முன்வருகிறார். அந்த நேரமாகப் பார்த்து அந்த தொகுதி பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என்ற வரையறைக்குள் வருகிறது; தனித் தொகுதியாகிறது.
தான் போட்டியிட முடியாது என்றானபின் செல்வாக்கு மிக்கவர், கீழ்சாதியிலிருந்து அடிமையாய் ஒருவனைப் பிடித்து வேட்பாளராக நிறுத்துகிறார். சமீபத்தில் வந்த ‘நந்தன்’ படத்தில் கதைநாயகன் சசிகுமாரை பிரேமுக்குள் கொண்டு வருவார்களே. அதேபோல…
அந்த அக்கிரம அநியாயத்தைப் பார்த்து கொதிக்கிற கீழ்சாதிக்கார இளம்பெண் அமுதா, வேட்பாளராக களமிறங்குகிறார். எமன் வந்தாலே கடித்துத் துப்புகிற அளவுக்கு பலசாலியான சாதி வெறியர்கள் ஏழை எளிய அமுதாவை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதும் அதையெல்லாம் அவளால் சமாளிக்க முடிந்ததா என்பதுமே திரைக்கதை… தேர்தலில் வென்றது யார் என்பது கிளைமாக்ஸ். இயக்கம் வெண்பா கதிரேசன்
அமுதாவாக மதுமிதா. ‘இது என் ஜனநாயக உரிமை; என்னை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று முழங்குவதாகட்டும், தன்னை கொலை செய்ய முன்வந்தவர் செருப்பை சாணியில் தோய்த்து முகத்தில் தேய்த்த பின்னரும் அவரிடம் கருணையோடு நடந்து கொள்வதாகட்டும், தேர்தல் பிரச்சாரத்தில் தம் சமூகத்துக்கான உரிமை மறுக்கப்படுவதை எடுத்துச் சொல்வதாகட்டும் காட்சிகள் ஒவ்வொன்றிலும் அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு தான் பொருத்தமானவள் என்று சொல்வது போலிருக்கிறது அவரது நடிப்புப் பங்களிப்பு.
சாதி வெறியர்களாக வருகிறவர்களின் நடிப்பில் தெரிகிறது கேரக்டர்களுக்கேற்ற கெத்து.
பட்டியலினத்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் பெயரளவில் வேட்பாளராக அறிவிக்கப்படுகிற முருகேசன் தன் மகன் காதலிக்கும் அமுதா மீது காட்டும் பாசமும், பாசத்திற்கு அடையாளமாக அவர் எடுக்கும் முடிவும் நெகிழ வைக்கிறது.
சீரியஸான கதைக்கு பொருந்தவில்லை என்பது குறையாக இருந்தாலும், இயக்குநர் வேல்முருகன் எட்டிப் பார்க்கிற காட்சிகளை கொஞ்சமே கொஞ்சம் சிரித்து ரசிக்க முடிவது ஆறுதல்.
கிராமத்து மனிதர்களோடு மனிதர்களாய் கலந்திருக்கிற மற்ற நடிகர், நடிகைகளில் ஒருவரைக்கூட நடிப்பில் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தளவுக்கு அத்தனை பேரிடமிருந்தும் படம் பெற்றிருப்பது கதைக்குப் பொருத்தமான நடிப்பு.
கதையோடு இணைந்து பிணைந்திருக்கும் பாடல்களுக்கு வி எச் ஹரிகிருஷ்ணன் தந்திருக்கும் இசை கச்சிதம். ஒளிப்பதிவாளர் பிரவீன் அமைத்திருக்கும் கேமரா கோணங்கள் காட்சிகளின் உயிரோட்ட சதவிகிதத்தை அதிகரித்திருக்கிறது.
தேர்தல் அரசியல் களத்தில் சாதி வெறியர்களின் கைகள் எந்தளவுக்கு ஓங்கியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியிருக்கும் இந்த படம், அப்படியான வெறியர்களை எதிர்க்க எந்த இழப்புக்கும் அஞ்சாத துணிச்சலால் மட்டுமே முடியும் என்பதை பாடமாக கற்பிக்கிறது.
நாளை நமதே _ விடியலின் துவக்கம்!
-சு.கணேஷ்குமார் 
