‘நாடு’ சினிமா விமர்சனம்

மலைவாழ் மக்கள் தங்களது அன்றாட அவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலை, அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் என ஒருசில அம்சங்களை முன்வைத்து ஒரு படைப்பு!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிற மலைகிராமம் தேவநாடு. அந்த ஊர் மக்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள அரசு மருத்துவமனை இருக்கிறது. அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், காட்டு விலங்குகளின் நடமாட்டம் தருகிற பயத்தால் அந்த மருத்துவமனைக்கு நியமிக்கப்படுகிற மருத்துவர்கள் யாருமே பணியில் தொடர்வதில்லை. அதன் விளைவாக தேவையான நேரத்தில்  அதற்கேற்ற மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழப்புகள் தொடர்கிறது.

அப்படியான பரிதாபச் சுழலில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க இளம் பெண் டாக்டர் ஒருவரை அந்த பகுதியின் கலெக்டர் நியமிக்கிறார்.

ஊர் மக்களிடம் ‘புது டாக்டருக்கு நீங்க எல்லாரும் பாதுகாப்பா இருந்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவருக்கு பிடிக்கிற மாதிரி நடந்துக்கிட்டா அவரு உங்களுக்கு மருத்துவம் பார்த்துக்கிட்டு உங்ககூடவே இருப்பார். இல்லாட்டி அவர் கிளம்பிப் போய்டுவார்’ என்கிறார்.

அந்த டாக்டர் பணியில் சேர்கிறார். சேர்ந்த அன்றே வாட்டசாட்டமான புலியொன்று உறுமியபடி அவர் வீட்டைச் சுற்றி வர, ஊர் மக்கள் தீவட்டிகளை தூக்கிக்கொண்டு அவருக்கு காவலுக்கு வர என பரபரப்பு கூடுகிறது.

ஊர் மக்கள் டாக்டருக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள எதையெல்லாமோ செய்கிறார்கள். அவருக்காக கல்யாணத் திருவிழா நடத்தி ஆட்டமாடி பாட்டு பாடி  உற்சாகமூட்டுகிறார்கள். அந்த செயல்பாடுகள் தந்த பலன் என்ன? டாக்டர் பணியில் தொடர்ந்தாரா, ஊரை விட்டு பறந்தாரா? இப்படியான கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இருக்கிறது. இயக்கம் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்

‘தான் எதை செய்தாலும் அது தன்னைச் சார்ந்த மக்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்’ என்பதை கொள்கையாக வைத்திருக்கிற, அதற்காக நாள் முழுக்க விதவிதமாக உழைக்கிற பாத்திரத்தில் ‘பிக்பாஸ்’ தர்சன். உடையில் எளிமை, நடையில் பணிவு, உதிர்க்கும் வார்த்தைகளில் கனிவு, செயல்களில் மக்கள் மீதான அக்கறை என தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு உரிய உயிரோட்டம் தந்திருக்கிறார்.

டாக்டராக மகிமா நம்பியார். புலியைக் கண்டு மிரள்வது, டீ கூட போடத் தெரியாத மக்கள் தனக்காக ஃபாஸ்ட் ஃபுட் தயாரித்துக் கொடுக்கும் அளவுக்கு மாறுவதைக் கண்டு நெகிழ்வது, தனக்குப் பொருத்தமில்லாத இடத்தில் சிக்கிகொண்ட எரிச்சலை காட்டிக் கொள்ளாமல் நோயாளிகளுக்கு முழுமனதோடு சிகிச்சையளிப்பது என சுற்றிச்சுழலும் அவரது நடிப்பு மனம்கவர்கிறது. போகிறபோக்கில் அவரை வைத்து, ‘திருமண வயதை எட்டாமல் கல்யாணம் செய்து வைப்பது தவறு என பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர்.

கதையின் முக்கிய பாத்திரத்தில் ராமன், லெஷ்மணன் என இரண்டு பேராக வந்தாலும் ஒரேவிதமான நடிப்பைத் தந்திருக்கிற ஆர் எஸ் சிவாஜி கவனிக்க வைக்கிறார்.

நல்லது கெட்டதுகளில் கிராம மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிற சிங்கம்புலி வழக்கம்போல் அச்சுப்பிச்சு காமெடிக்குள் கால் வைக்காமல் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருப்பது எடுபடுகிறது.

சீரியஸான கதையோட்டத்தை ஆங்காங்கே லேசாக சிரித்தபடி கடப்பதற்கு கதாநாயகனின் தோழனாக, டீ மாஸ்டராக வருகிற இளைஞனின் டயலாக் டெலிவரி உதவியிருக்கிறது.

கலெக்டராக வருகிற அருள்தாஸ், கிராமத்து மக்கள் என நடிகர் நடிகைகள் தேர்வும் அவர்களின் பங்களிப்பும் கச்சிதம்.

சி சத்யாவின் பின்னணி இசையில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசைக்கும் கணிசமான மதிப்பெண் கொடுக்கலாம்.

திரும்பிய பக்கமெல்லாம் பனிப்பொழிவு, பரந்து விரிந்த பசுமை என மனதுக்கு குளிரூட்டும் மலைப்பகுதியின் அழகை சிந்தாமல் சிதறாமல் தன் கேமராவுக்குள் சிறைபிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி.

லாஜிக் பற்றி துளிகூட யோசிக்காத, பரிதாபத்தை தூண்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள் அணிவகுப்பது சலிப்பு. கமர்சியல் அம்சம் என்ற பெயரில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல், டூயட் பாடல் என வழக்கமான சினிமா மசாலா எதையும் தூவாமல் விட்டது ஆறுதல்.

டாக்டர் குழந்தைக்கு பெயர் சூட்டுகிற காட்சியும் சூட்டுகிற பெயரும் ஹைலைட்!

அந்த கிளைமாக்ஸ் காட்சி மனதை உலுக்காமல் விடாது.

மலைவாழ் மக்களை மையப்படுத்திய கதையென்றாலே மலையின் வளத்தை அழிக்க திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனம், நோய் பரப்பும் ரசாயன தொழிற்சாலை என பார்த்துப் பழகியதற்கு மாற்றாக, கிடைத்த மருத்துவ வசதியை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் மக்களை முன்வைத்து கதையை நகர்த்தியிருப்பது தனித்துவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here