இன்றைய இளம் தலைமுறை நல்லது கெட்டது பற்றி யோசிக்காமல், தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே மதிப்பளிப்பதால் ஏற்படும் விளைவுகளை ‘அடல்ஸ் ஒன்லி’ பேக்கேஜாக அள்ளித் தந்திக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’
இளம் பெண்களை தியேட்டர் இருட்டில் தடவி, இதழோடு இதழ் உரசி இன்பத்தில் மிதப்பவன் அந்த விடலைப் பருவ இளைஞன்.
மதுரையைச் சேர்ந்த அவன், ஆன்லைன் மூலம் நட்பான மாயவரத்துப் பெண்ணைத் தேடி காமப் பசியோடும் காண்டத்தோடும் பறந்து செல்கிறான்.
அவன் போய் சேர்ந்த நேரம் அவளது அப்பா, அம்மா யாரும் இல்லாத சந்தர்ப்பமாக அமைய, அவன் எதிர்பார்த்த ‘அந்த’ சம்பவம் நடந்ததா இல்லையா என்பதே திரைக்கதை… குறும்படத்துக்கான கன்டென்டை எடுத்துக் கொண்டு, அதற்கு ராவாக திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் பிரசாத் ராமர்.
எலும்பும் தோலுமாக இருக்கிற நாயகன் செந்தூர் பாண்டியன் நாயகியை பில்லியனில் உட்கார வைத்து மயிலாடுதுறை சுற்றுவட்டம் முழுக்க பைக் ஓட்டியிருக்கிறார். தடவல், உரசல், அந்த சுகத்துக்காக படபடப்பாக காத்திருத்தல் என நீளும் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
சதைப்பிடிப்பில்லாத நாயகி பிரீத்தி கரண் கதையின் போக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பங்களிப்பை பக்காவாக தந்திருக்கிறார். தன்னைத் தேடி வந்த இளைஞனை கூட்டிக் கொண்டு பைக்கில் ஊர் சுற்ற ஆசைப்பட்டு, அவன் அத்துமீறும்போது நடந்துகொள்ளும் விதம் இளம் தலைமுறை பெண்களுக்கு முன்னுதாரணம். அந்த காட்சியில் பேசும் வசனம் ஒட்டுமொத்த பெண்ணினத்தின் மனக் குமுறலின் பிரதிபலிப்பு.
நாயகியின் சிநேகிதிகள் எடுக்கும் ஜாலியான வீடியோவுக்கு பலிகடாவாகும் காட்சிகளில் தனது அப்பாவித்தனத்தால் ரசிக்க வைக்கிறார் நாயகனுக்கு நண்பனாக வருகிற சுரேஷ் மதியழகன்.
பிக்பாஸ் பூர்ணிமா, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா என மற்ற சின்னச் சின்ன பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பில் குறையில்லை.
மதுரை டூ மயிலாடுதுறை, மயிலாடுதுறை டூ பூம்புகார் என சாலைவழி பைக் பயணமாக கடந்தோடுகிற படத்தின் பெரும்பாலான காட்சிகளை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் உதய் தங்கவேல்.
எளிமையிலும் எளிமையான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்துக்கான பின்னணி இசையில் தெரிகிறது அதே எளிமை.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ எடுத்துச் சொல்லிருப்பது சரியான கருத்துக்களே!