லட்சியத்தை அடைய விரும்புகிறவர்கள் சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை மையப்படுத்தி ஓராயிரம் படங்கள் வந்தாயிற்று. இதோ இன்னொன்று…
கல்லூரிப் படிப்பை முடித்த அந்த இளைஞன் ‘நீங்களும் ஹீரோவாகலாம்’ என்ற பெயரில் ரியாலிடி ஷோ நடத்த நினைக்கிறான். அதன் மூலம் தானும் பிரபலமாகலாம்; பலரையும் நட்சத்திரமாக்கிப் பார்க்கலாம். அது அவனது லட்சியம். அதற்காக மொபைல் ஆப் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். நண்பர்கள் அவனுடன் இணைகிறார்கள். அவர்களின் துணையோடு அவனால் அவனது லட்சியத்தை அடைய முடிந்ததா இல்லையா என்பதே திரைக்கதை…
படத்தை இயக்கியிருக்கும் அனந்த் கதையின் நாயகனாகி இன்றைய இளைஞர்கள் தங்களது லட்சியத்தை அடைகிற விஷயத்தில் எப்படியெல்லாம் பரபரப்பாய், சுறுசுறுப்பாய் இருப்பார்களோ அப்படியே மாறியிருக்கிறார். அவமானங்களைச் சந்திப்பது, தோல்விகளை எதிர்கொள்வது, நண்பர்களால் கைவிடப்படுவது, மறுக்கப்படும் வாய்ப்புகளால் மனம் உடைவது என நீளும் காட்சிகளில் அழுகை, கோபம், விரக்தி என காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளை, உணர்ச்சிகளை தன் நடிப்பில் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.
பணக்கார வீட்டுப் பெண்ணாக வருகிற பவானிஸ்ரீக்கு லட்சிய வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிற இளைஞனைக் காதலிக்கிற வேலை. எந்தவொரு தனித்துவமும் இல்லாத அந்த கதாபாத்திரத்துக்கு தனது வசீகரப் புன்னகையாலும் எளிமையான நடிப்பாலும் உயிரூட்ட முயற்சித்திருக்கிறது ‘வழிநெடுக காட்டுமல்லி.’
ஹீரோவுக்கு நண்பர்களாக, நண்பிகளாக வருகிற யூ டியூபர் இர்ஃபான் உள்ளிட்ட ஐந்தாறு பேர் அவரவர் பங்களிப்பை நேர்த்தியாய் வழங்கியிருக்க, அவர்களில் ஒருவராக தனித்து தெரியும்படியான ஒருசில காட்சிகளில் அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் ஆர் ஜே விஜய்.
மகனது கனவு நிறைவேற கைகொடுக்கும் தந்தையாக குமரவேல், ஹீரோவின் சொந்தக் கதை சோகக் கதையை காதுகொடுத்துக் கேட்கிறவராக இயக்குநர் வெங்கட் பிரபு என படத்தில் நடிகர், நடிகைகள் ஏராளம்… நடிப்பில் நிறைவு.
‘தல’ ரசிகராக வருகிற வினோத்தின் வெள்ளந்தித் தனம் கவனிக்க வைத்தாலும், அவருக்கான முன்கதை, பரிதாப முடிவெல்லாம் கதைக்கு தேவையில்லாத ஆணி!
ஏ ஹெச் ஹாசிஃப் இசையில் நடிப்பு அசுரன் தனுஷ், இசை அசுரன் ஜீ வி பிரகாஷ் என இருவரும் ஆளுக்கொரு பாடலைப் பாடி உற்சாகம் தர, பின்னணி இசை காட்சிகளின் சுக துக்கங்களை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது.
‘லட்சியத்தை அடைவதெல்லாம் சுலபமில்லை’ என்பதை நீட்டி முழக்கி எடுத்துச் சொல்லும் திரைக்கதை சற்றே சலிப்பு தந்தாலும், ‘முயற்சித்தால் முடியாதது ஏதுமில்லை’ என்ற ஹேப்பி எண்டிங்கில் கதை லேண்டிங் ஆகியிருப்பதை தாராளமாகப் பாராட்டலாம்.
நண்பன் ஒருவன் வந்தபிறகு… இளைய தலைமுறையின் தன்னம்பிக்கைக்கு பொருத்திய சிறகு!