சாதிய அடக்குமுறை வெறியாட்டக் கதைக்களத்தில் அமைந்த படங்களின் வரவு அதிகரித்திருக்கிற சூழ்நிலையில், கிட்டத்தட்ட வாராவாரம் அப்படியான படைப்புகளின் படையெடுப்பு தொடர்கிற நிலையில், இந்த வாரம் ரசிகர்களை கண்ணீரில் நனைய வைப்பதற்காக களமிறங்கியிருக்கிற ‘நந்தன்.’
ஊரையே தன் செல்வாக்காலும் அரசியல் பதவியாலும் அடக்கியாண்டு கொண்டிருக்கிற உயர்சாதிக்கார பெரிய மனிதர், தான் காலங்காலமாய் வகிக்கிற ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கீழ்சாதிக்காரர் ஒருவருக்கு விட்டுத்தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். அதனால் அவர், தன்னிடம் அடிமையாக விசுவாசத்தின் உச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கிற கீழ்சாதிக்காரரை அந்த பதவியில் அமர வைக்கிறார்.
பதவி கைமாறினாலும் தன் அடிமை அந்த பதவிக்கான அதிகாரத்தை துளிகூட அனுபவித்துவிட முடியாதபடி அணைகட்டி நிற்கிறார் பெரிய மனிதர். அந்த அடிமை ஒருநாள் அவரை எதிர்க்க துணிச்சலோடு அடியெடுத்து வைக்கிறான்.
அந்த அடி அவனையும் அவனது வாழ்க்கையையும் வயநாடு நிலச்சரிவு போல் ஈவிரக்கமின்றி அடித்துத் துவைக்கிறது. அவற்றை அவனால் சமாளிக்க முடிந்ததா, தன் பதவியை வைத்து அவனால் உருப்படியாக எதையாவது செய்ய முடிந்ததா என்பதே கதையோட்டம்…
ஒடுக்கப்பட மனிதர்கள் உயர்சாதிக்காரர்களால் என்ன மாதிரியான கொடுமைகளை அனுபவிப்பார்கள் என்பதை பட படைப்புகளில் பார்த்திருக்கிறோம்; மனம் கலங்கியிருக்கிறோம். அப்படி கலங்க வைக்கும்படியான கதாபாத்திரத்தை ஏற்று, மனிதாபிமானமற்றவர்கள் தருகிற மரண அவஸ்தைகளை காட்சிக்கு காட்சி அனுபவித்திருக்கிறார் சசிகுமார்.
பணபலம், அரசியல் பலம், அடியாள் பலம் என அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கிற உயர்சாதிக்காரர்கள் கீழ் சாதிக்காரர்களை எப்படியெல்லாம் துன்புறுத்துவார்கள், கொடூரமாக நடந்து கொள்வார்கள் என்பதெல்லாம் அறிந்த கதை, தெரிந்த கதை, பல படங்களில் பார்த்த கதை. அப்படியான கொடுமைகளைச் செய்கிற வேடத்தில் வருகிற இயக்குநர் பாலாஜி சக்திவேல் கொடுமைகளை அதற்கான வெறித்தனத்துடன் செய்திருக்கிறார்.
சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி, நேர்மையான அரசு அதிகாரியாக சமுத்திரகனி என இன்னபிற நடிகர், நடிகைகள் அத்தனைப் பேருக்கும் கதையில் முக்கியத்துவமிருக்கிறது; அவர்களின் நடிப்பில் உயிரோட்டமிருக்கிறது.
கதையோடு பொருந்திப்போகும் பாடல்களுக்கு ரசிக்கும்படியும், பின்னணி இசையை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும்படியும் தந்திருக்கிறார் ஜிப்ரான்.
ஒளிப்பதிவு தரம்.
கதை நடப்பது பல வருடங்களுக்கு முன்பல்ல. இப்போதைய காலகட்டத்தில் அதுவும் 2024-ல் நடக்கிறது. கிராமத்தில் சாதிவெறியர்களால் கீழ்சாதிக்காரர்களுக்கு உலகமகா கொடுமைகள் நடக்கிறது. அது பற்றி மீடியாவுக்கோ, வெளியுலத்துக்கோ எந்த விவரமும் தெரிவதில்லை. போலீஸ் அதுஇதுவென ஒருவரும் அந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. அதையெல்லாம் பார்த்து, ‘இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா?’ என இயக்குநரை பார்த்து கேட்கத் தோன்றுகிறது. அப்படி கேட்பவர்களுக்கு, படம் தொடங்கும்போதே ‘இப்போதும் இப்படியெல்லாம் நடக்கிறதா? என யாராவது கேட்டால் அவர்கள் கையைப் பிடித்து கூட்டிப் போய் காட்ட நான் தயார்’ என்று சொல்கிறார் இயக்குநர் இரா சரவணன்.
‘நடப்பதைத்தான் காட்டுகிறோம்’ என்று திரைப் படைப்பாளிகள் சொல்வதை மறுக்கவும் முடியவில்லை; அதையே தொடர்ந்து விதவிதமாக காட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் போக்கை நினைத்துக் கவலைப் படாமலும் இருக்க முடியவில்லை.
‘எது எப்படியானாலும் ‘ஆள்வதற்கு மட்டுமல்ல, வாழ்வதற்கே அதிகாரம் தேவை’ என்று என்று நந்தன் சொல்லியிருக்கும் கருத்தில் உண்மையிருக்கிறது!