‘நேற்று இந்த நேரம்’ சினிமா விமர்சனம்

பரபரப்பான கிரைம் நாவல் ஒன்றை படிப்பது போன்ற அனுபவம் தருகிற நேற்று இந்த நேரம்.

நான்கு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் என ஏழு பேர் குளிரை அனுபவிக்க, குடித்துக் கூத்தடிக்க ஊட்டிக்குப் போகிறார்கள். போன இடத்தில் ஒரு இளைஞன் காணாதுபோய்விட, ஆறு பேர் மீதும் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அதில், காணாமல் போன இளைஞன் பற்றி கிடைக்கிற தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருக்க, இரண்டொரு நாட்களில் இன்னொரு இளைஞனும் காணாது போகிறான்.

இது ஒருபக்கமிருக்க சீரியல் கில்லர் ஒருவன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொலைகள் செய்வது, அந்த கொலை பற்றி போலீஸாருக்கு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தகவல் கிடைப்பது என கதைக்களம் சூடுபிடிக்கிறது…

இரண்டு இளைஞர்கள் காணாமல் போனதன் பின்னணி என்ன? அவர்களுக்கு என்னவானது? அவர்கள் காணாமல் போனதற்கும் அந்த ஆறு பேருக்கும் என்ன சம்பந்தம்? இந்த விவகாரத்தில் சீரியல் கில்லருக்கு தொடர்புண்டா?

இப்படியான மண்டையைக் குடையும் கேள்விகளுக்குப் பதில் தரும்படி, காட்சிக்கு காட்சி பரபரப்பான திருப்பங்களுடன் திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் சாய் ரோஷன் கே ஆர்.

ஷாரிக் ஷாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்… இந்த ஏழு பேரும் ஹீரோ, ஹீரோயின் பாத்திரங்களைச் சுமந்திருக்க, ஆனந்த், செல்வா, பாலா என மிகச் சிலர் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள்.

ஹீரோக்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன் எந்த நேரமும் போதையில் மிதக்கிறார்; சூதாட்டத்தில் நண்பர்களை வீழ்த்தி சுகம் காண்கிறார். தான் காதலிப்பதாய் நம்பி பழகுகிறவர்களை அனுபவித்து கழட்டி விடுவதில் பொருத்தமான மெல்லிய வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

மற்ற ஆறு பேரும் குடிப்பது, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது, தங்களின் பொது எதிரியை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டி செயல்படுத்துவது என தங்களுக்கான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக வருபவர் ஹீரோ போல் லட்சணமாக இருக்கிறார். அலட்டலற்ற அவரது விசாரணையும் உண்மையைக் கண்டுபிடிக்கும் விதமும் ஈர்க்கிறது.

காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறது கெவின் என்னின் பின்னணி இசை. ஊட்டியின் பச்சைப்பசேல் பியூட்டியை வளைத்துச் சுருட்டியிருக்கிறது விஷால் எம்மின் கேமரா.

படத்தின் முன்பாதி பெரிதாய் கவராமல் கடந்துபோக… இளைஞர்கள் காணாமல் போனதன் பின்னணியிலுள்ள மர்மங்கள் விலகுவது, அதில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள், டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட் என பின்பாதி முழுக்க பரபரப்புக்குப் பஞ்சமில்லை. ‘திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்’ என்ற உணர்வு வருவதையும் தவிர்க்க இயலவில்லை. அந்த கிளைமாக்ஸ் ‘அட’ போட வைக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையின் ஆழமில்லாத காதல், நல்லது கெட்டது யோசிக்காத உடல் சுகத்துக்கான அத்துமீறல், குடிப் பழக்கம், போதைப் பழக்கம் என எல்லாவற்றையும் வெளிப்படையாய் காட்சிப் படுத்தியிருப்பதை எல்லோராலும் ரசித்துவிட முடியாது.

நேற்று இந்த நேரம், விறுவிறுப்பான கிரைம் சப்ஜெக்ட் படங்களை விரும்புகிறவர்களுக்கு கணிசமான திருப்தி தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here