‘நித்தம் ஒரு வானம்’ சினிமா விமர்சனம்

 

சித்தம் மென்மையானவர்களுக்குப் பிடித்த ஃபீல் குட் படங்களின் வரிசையில் ‘நித்தம் ஒரு வானம்.’

சராசரி மனிதனாக இல்லாத ஒருவன், தான் படிக்கும் கதைகளின் மூலம் மனமாற்றத்துக்கு ஆளாகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிற கதை!

கதை நாயகன் தீண்டாமையை கடைப்பிடிக்கக்கூடியவன். அச்சச்சோ… தீண்டாமை என்றதும் வழக்கமான சாதி, மத தீண்டாமை பற்றிய படம் என நினைக்க வேண்டாம். இது சுத்தம் சுதாதாரம் சார்ந்த தீண்டாமை. டோட்டல் டிபரன்ட்!

யாரையும் தொட்டுப் பேசாத, எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம் என்றிருக்கிறக்கூடிய கதைநாயகன் யாரிடமும் கலகலப்பாக நான்கு வார்த்தை கூட பேசாத குணத்துக்கு சொந்தக்காரன். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது அவனது இயல்பு. அப்படிப்பட்டவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடாகிறது.

யாரையும் தொட்டுப் பேசாதவன் மனைவியை எப்படி தொடுவான்? எப்படி குடும்பம் நடத்துவான்? இப்படியொரு ஜாலியான, வில்லங்கமான சந்தேகம் நம் மனதுக்குள் மட்டுமல்ல, அவனைச் சார்ந்தோருக்கே எழுகிறது. சில காரணங்களால் ஏற்பாடான அந்த கல்யாணம் நின்று போகிறது. அதற்கான காரணம் என்ன என்பது திரைக்கதையிலிருக்கிற முதல் சுவாரஸ்யம்.

கல்யாணம் நின்று போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகிற கதைநாயகனை அதிலிருந்து மீண்டுவர இரண்டொரு கதைகளைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார் அவனது ஃபேமிலி டாக்டர். அந்த கதைகள் அந்த டாக்டர் சந்தித்த நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு என்பது திரைக்கதையின் இரண்டாவது சுவாரஸ்யம்.

கதைகளைப் படிக்கிற கதைநாயகன், அந்த கதைகளின் நாயகனாக தன்னையே நினைத்துக் கொள்வதும் அதற்கான காட்சிகளும் கதையோட்டத்தின் மற்றொரு சுவாரஸ்யம்.

அந்த கதைகளில் கடைசிப் பக்கங்கள் விடுபட்டுப் போயிருக்க அதை தெரிந்துகொள்ள கதையில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி கதைநாயகன் மாநிலங்கள் கடந்து பயணிப்பது இன்னொரு சுவாரஸ்யம்,

பயணத்தின் முடிவில், அவன் சந்திக்கிற கதை மாந்தர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் ஏற்றங்களும் மாற்றங்களுமாக விரியும் காட்சிகள் கதையோட்டத்தின் கனமான அத்தியாயங்கள்.

அவர்களின் வாழ்க்கை கதைநாயகனுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்குகிறது என்பதே கிளைமாக்ஸ். இயக்கம் ரா. கார்த்திக்

படத்தில் யாருக்கும் உயிரைக் கொடுத்து நடிக்க அவசியமில்லாத, அத்தனைப் பேருக்கும் உணர்வைக் கொட்டி நடிக்கும்படியான கதாபாத்திரங்கள். யாருமே பேருக்கு நடிக்கவில்லையென்பது படத்தின் ஹைலைட் அம்சம்!

மரு வைத்து ஒன்று மரு வைக்காமல் இன்னொன்று என்பதுபோல் கதைநாயகன் அசோக் செல்வனுக்கு சின்னச் சின்ன மாற்றங்களுடன் கூடிய தோற்ற மாற்றங்கள். அதற்கேற்றபடி மெல்லிய உணர்வுகளை அலட்டிக் கொள்ளாத சின்னச் சின்ன முகபாவங்களில் வெளிபடுத்தியிருப்பது கச்சிதம்!

படத்தில் ரிது வர்மா, ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி என துடிப்பான மூன்று ஹீரோயின்கள்.

எடுப்பான நாசியும் கூர்மையான விழிகளும் ஷிவாத்மிகாவின் கவன ஈர்ப்பு சங்கதிகள். உற்சாகத்தை, சோகத்தை, ஏமாற்றத்தை என அத்தனை உணர்வுகளையும் அந்த விழிகளின் வழி தவழ விடுவது கதாபாத்திரத்தின் தன்மைக்கு அத்தனை பொருத்தம்!

காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதம் காட்டுவது, அப்பா ஏற்பாடு செய்யும் கல்யாணத்தை சாதுர்யமாக நிறுத்துவது என அபர்ணா பாலமுரளியின் பாத்திரப் படைப்பும் அவரது சேட்டைகளும் கலகலப்புக்கு கேரண்டி!

வானத்தில் பளீரென மின்னல் வெட்டுவதுபோல் ஒரேயொரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார் ஜீவா. டாக்டராக வருகிறார் அபிராமி!

கதை தமிழ்நாடு கடந்து கொல்கத்தா, இமாச்சல் என வெவ்வெறு மாநிலங்களில் பயணிக்க விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு காட்சிகளின் நகர்வுகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் மனதுக்கு இதம். பின்னணி இசை நேர்த்தி!

நிறைவாக ஒரு வரி… இதமான கதைகளை விரும்புகிறவர்கள் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்களைப் பார்த்த உணர்வுக்குள் விழலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here