இந்திய சினிமாவில் உண்மையிலேயே வித்தியாசமான முயற்சியாக ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே பங்குபெறும் படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா.’
இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் படத்தின் கதைநாயகனும் இயக்குநருமான ஜி. சிவா பேசும்போது, ‘‘இந்த தலைப்பை வைத்ததற்கு பல விமர்சனங்கள் சந்தித்தேன், இந்த படத்திற்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘நூறு கோடியில் ஒருவன்’ ஆனால் அந்த தலைப்பை நான் கேட்டு பெறுவதற்கு முன்னர் அந்த படமே வெளியாகி விட்டது. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகன் அவருடைய படத்தில் வந்த வசனத்தை இப்படத்திற்கு தலைப்பாக வைத்தது பெருமையாக உள்ளது. இந்தப் படத்தின் தலைப்பிற்கு காரணம் கதையின் அழுத்தம் தான்.
இந்த படம் பொது மக்களுக்கு ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எந்த ஒரு விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் இதனை உருவாக்கியுள்ளோம். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது. நான் பெருமைக்காக சொல்லவில்லை. நான் ஒருவனாக தனியாக சண்டை போடுவது உங்களுக்கு சலிப்பாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அப்படி இருக்காது. சண்டைப் பயிற்சியாளர் இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தார். தனி ஒருத்தர் சண்டை போடுவது எளிது, ஆனால், அதை படமாக மாற்றுவது கடினம் அதற்கு அவருக்கு பெரிய பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் இந்த படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்,. நானும் அவரும் பல இடங்களில் சிரமப்பட்டு இப்படத்தை உருவாக்கினோம். இது போன்ற படங்களில் மக்களை வேறு சிந்தனைக்கு செல்ல விடாமல் இருக்க உதவுவது இசைதான். இந்த படத்தில் அது அருமையாக வந்துள்ளது.
இந்தப் படத்தில் சிவன் உருவம் வந்தது பற்றி பலரும் என்னிடம் விமர்சனம் வைத்தார்கள். நான் தவறான நோக்கத்தில் அதை செய்யவில்லை மக்களிடம் நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் செய்தேன்” என்றார்.
தயாரிப்பாளர் ஜோசப் பேசும்போது, ‘‘இந்தப் படத்தின் கதையை சிவா சார் என்னிடம் சொன்ன போது, எனக்கு பார்த்திபன் சார் எடுத்த ‘ஒத்த செருப்பு’ படம் ஞாபகம் வந்தது. அதையே ஏன் எடுக்க வேண்டும்? என்று கேட்டேன். ஆனால், அதைத்தாண்டி இந்தப் படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்துகள் உள்ளது என்றார். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. பார்த்திபன் சார் ஒரே ரூமில் நடப்பதை எடுத்தார். ஆனால், இப்படம் பல ஊர்களில் நடப்பது போல இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் மணிசேகரன் செல்வா, ஒளிப்பதிவாளர் ஒகி ரெட்டி, எடிட்டர் அரவிந்த் ஜே பி உள்ளிட்ட படக் குழுவினரும் நிகழ்வில் படம் குறித்து பேசினார்கள்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து – இயக்கம் : ஜி.சிவா
ஒளிப்பதிவு – ஒகி ரெட்டி & அருண் சுசில்
இசை – மணிசேகரன் செல்வா
எடிட்டிங் – அரவிந்த் ஜெ பி
கலை – சந்துரு
ஸ்டண்ட் – ‘வயலண்ட்’ வேலு
நடனம் – ராஜ்தேவ்
பாடல்கள் – தினேஷ்
இணை தயாரிப்பு – ஜெ ஏ ஜோசப் & சஞ்சய்
தயாரிப்பு – பாலா ஞானசுந்தரம்
மக்கள் தொடர்பு – ஏ.ராஜா, சிவா