தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம் வரும் எப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக பாத்தின் இசை வெளியீடு எப்ரல் 18; 2024 அன்று சென்னையில் நடந்தது. நடிகர் ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும் இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும் பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் படத்தில் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வில் படத்தின் நாயகன் தமன்குமார் பேசியபோது, ” ஒரு நொடி… ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.
தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும். இந்த திரைப்படத்தை நம்பி முதலீடு செய்து என்னை போன்ற திறமையான நடிகர்களை… மணி வர்மன் போன்ற திறமையான இயக்கநரையும் ..தயாரிப்பாளர் அழகரால் தான் உருவாக்க முடியும். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது ஏராளமான நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் தயாரிப்பாளர் அதனை எளிதாக கையாண்டு படத்தை உருவாக்கினார். முதலில் அவர் திரைப்படம் தயாரிப்பதை.. அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. இப்போதுதான் அவர்களுக்கு தெரியும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவருடைய ஊரில் தான் படப்பிடிப்பை நடத்தினார்.
இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.
இந்தத் திரைப்படத்தில் மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையா அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் போது அவருடன் பேசும் போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக ”சினிமாவில் நம்பர் ஒன்.. நம்பர் டூ என்பது இருந்து கொண்டே இருக்கும். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர்கள்தான் மாறுவார்கள். அது நிலைத்த புகழ் அல்ல. நிலைத்த புகழ் என்பது… யார் ஒருவர் ஈகை, தியாகம் , வீரம், அன்பு.. இருக்கிறதோ அவர்தான் நடித்த புகழை பெறுவார்” என சொன்னார். அது உண்மைதான். அவர் சொன்னதை தினமும் நான் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் முடிந்த சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு கேபிள் சங்கரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது போனில் தொடர்பு கொண்டு ‘அயோத்தி’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது. அதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது’ என பாராட்டினார். அப்போது அவரிடம், ‘நான் இன்று ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த படமும் சிறப்பாக வரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன். படத்திற்கு டப்பிங் செய்யும் போது ஒரு கேரக்டருக்காக கேபிள் சங்கர் பின்னணி பேச வந்தார். படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனஞ்ஜெயனை அழைத்து வந்தார். அவர் வந்த பிறகு இந்தப் படத்திற்கான முகவரியே மாறிவிட்டது.
நானும் இயக்குநர் மணி வர்மனும் இணைந்து இதற்கு முன் ‘கண்மணி பாப்பா’ எனும் படத்தினை உருவாக்கினோம். அந்த திரைப்படம் நன்றாக தான் இருந்தது. ஆனால் வெளியீடு சரியான தருணத்தில் அமையாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் தனஞ்ஜெயன், ”இந்த படத்தை நான் வெளியிடுகிறேன். ஆனால் சில சிறிய திருத்தங்களை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றார். இதனையும் அவர் ஒரு ஆலோசனையாக தான் சொன்னார். படத்தின் டைட்டில் முதல் கொண்டு சில திருத்தங்களை அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். சின்ன சின்ன விசயங்கள் ஒரு படத்தினை மாற்றிவிடும் என்பதை உணர்ந்தோம். இந்த திரைப்படத்தை மக்களை சென்றடைய வைப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி.. எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம்” என்றார்.
படத்தின் இயக்குநர் மணிவர்மன் பேசியபோது, ”இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.
சின்ன பட்ஜெட் படம் என்பதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் நான் கேட்ட விசயங்களை தயாரிப்பாளர் தாராள மனதுடன் வழங்கினர். மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் பல சிரமங்களுக்கு இடையே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி படத்தின் படப்பிடிப்பிற்கு உதவினார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கிய போது ஒரு வேடத்திற்காக டப்பிங் பேச கேபிள் சங்கரை அழைத்தேன். அவர் இப்படத்தினை பார்த்து சிலாகித்து பாராட்டினார். அத்துடன் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அறியப்படும் தனஞ்ஜெயனை அழைத்து வந்து படத்தை காண்பித்தார். இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்… அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி.
தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ‘ என பாராட்டு தெரிவித்தனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்… எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி… அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். அறிமுக இசையமைப்பாளர். இவரின் இசையில் உருவான பாடல்களை கேட்டிருக்கிறேன். திறமை இருக்கிறது. அதனால் வாய்ப்பு அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாகவும் நன்றாக வந்திருக்கிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இசையமைப்பாளருக்கும் நல்லதொரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்” என்றார்.