‘ஒரு நொடி’யில் நிகழும் சம்பவம்கூட வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கும் படம்.
சத்தியமாய் எதிர்பாராத கிளைமாக்ஸுடன், மலையாள கிரைம் திரில்லர் ஸ்டைலில் ஒரு படம்.
நடித்திருக்கிற அனைவருமே அவரவர் பாத்திரத்தில் மிகச் சரியாய் பொருந்தியிருக்கிற, ஏற்றிருக்கும் பாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக தந்திருக்கிற படம்.
ஒரு எளிய மனிதர், தான் லோக்கல் தாதா ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த 8 லட்ச ரூபாய் பணத்துடன் கிளம்பிப் போகிறார். போனவர் வீடு திரும்பாமல் போகவே, காணாமல் போனவர் என்னவானார் என தேடும் பணியில் இறங்குகிறது போலீஸ். விசாரிக்க விசாரிக்க நடந்த சம்பவங்கள் காட்சிகளாய் விரிய விரிய அதிர்ச்சியில் உறைந்துபோகிறோம்.
விறுவிறுப்பாக ஓடுகிற இந்த கதையில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட அதற்கு காரணம் யார் என தேடிப்பிடிப்பது பரபரப்பு கூட்டுகிறது. இயக்கம் மணிவர்மன்
கதாநாயகனாக தமன் குமார். அவரது நெகுநெகு உயரம் காவல்துறை உயரதிகாரிக்கான ஆளுமையைக் கொடுக்க, கண்கள் வழியே கட்டளைகளைப் பிறப்பிப்பது, அரசியல் பலமிக்கவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் எதிர்ப்பது, குற்றவாளி என கருதுபவர்களை தயவு தாட்சண்யமின்றி கஸ்டடிக்கு கொண்டு வந்து சுளுக்கெடுப்பது, உண்மையான குற்றவாளியை சாமர்த்தியமாக நெருங்குவது என கடந்தோடும் காட்சிகளில் துடிப்பான நடிப்பால் கவர்கிறார்.
ஏற்றுக் கொள்கிற கேரக்டரில் வாழ்ந்து காட்டுகிற எம்.எஸ்.பாஸ்கர், வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியாமல் அவமானத்தைச் சந்திப்பது, நண்பனுடன் ஜாலியாக பேசி உற்சாகமாவது அவருக்கான காட்சிகளுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது.
தன்னிடம் கடன் பெற்றவர்கள் திருப்பித் தர முடியாதபோது, அவர்களின் சொத்தை சூழ்ச்சி செய்து சுருட்டுவதை முழு நேரத் தொழிலாக செய்கிற வேல ராமமூர்த்தியின் தெனாவட்டுப் பேச்சும், திமிர்த்தனமும் ஈர்க்கிறது. எம்.எல்.ஏ.வாக வருகிற பழ கருப்பையா சிறியளவில் சீற்றம் காட்டிப் போகிறார்.
தயாரிப்பாளர் அழகர், ஸ்ரீரஞ்சனி, கஜராஜ், தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கருப்பு நம்பியார் என இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி.
கிரைம் திரில்லர் கதைக்களத்திற்கேற்ற சுறுசுறுப்பைத் தருகிறது சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை. ஜெகன் கவிராஜ், சிவசங்கர், உதயா அன்பழகன் வரிகளில் அமைந்த பாடல்கள் கதைச்சுழலை சரியாக உள்வாங்கி பிரதிபலித்துள்ளன.
அவரை இவரை என யாரையும் விட்டு வைக்காமல் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு ஆளாக்குவது சற்றே சலிப்பு தருகிறது. எது எப்படியிருந்தாலும் இரண்டு மணி நேரம் சஸ்பென்ஸை தக்க வைத்து கதையை நகர்த்தியிருப்பதில் தெரிகிறது இயக்குநரின் திறமை!
ஒரு நொடி, திரைக்கதையில் சரவெடி!