சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பத்து தல’ படத்தின் இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணாவுடன் இந்திய திரைப்படத் துறையின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைகிறது.
குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’ (இந்தி) என விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’வும் இந்தப் பட்டியலில் உள்ளது.
புதிய படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறும்போது, “குளோபல் ஒன் ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் ரமேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சினிமா மீது ஆர்வமுள்ளவர். மேலும், நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்க தொடர்ந்து ஆசைப்படுபவர். நாங்கள் பல கதைகளைப் பற்றி விவாதித்து, ஒரு தனித்துவமான கதையம்சம் கொண்ட ஒரு படத்திற்காக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் இந்த முயற்சி பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிய சினிமா அனுபவத்தை வழங்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றபடி சிறந்த படைப்புகளை உருவாக்கும் இணையற்ற திறமையான திரைப்பட இயக்குநர் கிருஷ்ணாவுடன் எங்கள் தயாரிப்பு நிறுவனமான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் கைகோர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு புதிய பரிமாண அனுபவத்தை வழங்கும் மற்றும் இது ஒரு ஆல் இந்திய திரைப்படமாக இருக்கும். படத்தின் தலைப்பை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்களுடன் விரைவில் அறிவிப்போம்” என்றார்.