‘நீ செத்து பொழச்சவன்டா, எமன பார்த்து சிரிச்சவன்டா…’ -’பிச்சைக்காரன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனியை பாட்டுப்பாடி ஊக்குவித்த மன்சூர் அலிகான்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சசி பேசியதாவது, “’பிச்சைக்காரன்2’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டிய முடிவு. ஏனென்றால், ‘பிச்சைக்காரன்’ கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாரும் இதை பிச்சைக்காரனின் கதையாகதான் பார்த்தார்கள். விஜய் ஆண்டனி மட்டும் தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார். இந்தப் படத்திற்காக சென்னை, பாண்டிச்சேரி என பல இடங்களில் இவர் பிச்சை எடுத்துள்ளார். பிச்சை எடுக்கும்போது என்ன மாதிரியான இசை வேண்டும் என அவர் கேட்ட போது எனக்கே குழம்பியது. அந்த இடத்தில் அவர் கேட்ட ஒரு கேள்விதான் முதல் 20 நிமிடத்திற்கான கதையை மாற்றியது. இசையமைப்பாளராக ‘நூறு சாமிகள்’ பாட்டையும் வெற்றிகரமாக தந்தார். நான் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல புது முகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அதுபோல, புதுமுக இயக்குநராக விஜய் ஆண்டனியை வரவேற்பதிலும் மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் மேடை ஏறியதுமே விஜய் ஆண்டனியை பார்த்து, ‘நீ செத்து பொழச்சவன்டா, எமன பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடலைப் பாடினார். பின்பு அவர் பேசியதாவது, “விஜய் ஆண்டனியின் அர்ப்பணிப்புதான் இன்று அவரை நம் கண் முன்னே நல்லபடியாக நிறுத்தி இருக்கிறது. இதுபோன்று அடுத்து எந்த கடினமான ரிஸ்க்கும் இருக்க வேண்டாம் என்று அவரை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்திற்காக இரண்டு கோடிக்கும் மேல் பிரம்மாண்டமான செட் அமைத்திருந்தார். அதில் முதல் நாளே என்னை கூப்பிட்டு நடிக்க வைத்தார். இதே இரண்டு கோடி என்னிடம் இருந்தால் மிகப்பெரிய கட்டிடம் கட்டி இருப்பேன். ஆனால், இந்த படத்திற்காக தேவைப்படுகிறது என்று அவர் இதை அமைத்தார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு கொண்டவர். அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி!” என்றார்.

நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது, “இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தேன். படத்தில் வேலை பார்க்கும் போதும், இதன் டிரெய்லரை பார்க்கும் பொழுதும் அந்த எண்ணம் மேலும் உறுதியானது. தயாரிப்பாளராக விஜய் ஆண்டனியை பார்க்கும் எந்த ஒரு நடிகருக்கும் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஏனென்றால், அவர் அந்த அளவுக்கு நடிகர்களை மரியாதையாக நடத்துகிறார். நான் சினிமாவுக்கு வந்திருக்கக் கூடிய இந்த 52 வருடங்களில் நான் பார்த்த ஒரு சில இயக்குநர்கள் தான் இயக்கத்தில் எல்லா நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படியான ஒரு இயக்குநர் தான் விஜய் ஆண்டனி. அவர் சினிமாவை முதலில் காதலிக்கிறார். அதன் பிறகு தான் பாத்திமாவை காதலிக்கிறார். நடிகராக விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் தன்னை உணர்ந்த ஒரு ஞானி. இசையமைப்பாளராகவும் எல்லா விதமான இசையையும் அவரால் தர முடியும். இது எல்லாவற்றையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் என்பது தான் நான் உணர்ந்தது. அதனால்தான் தண்ணீருக்குள் மூழ்கிய அவரை கடவுள் திரும்ப அனுப்பி வைத்து ‘பிச்சைக்காரன் 2’ படத்தை நல்லபடியாக முடிக்க வைத்துள்ளார்” என்றார்.

இயக்குநர் ‘ஜெயம்’ ராஜா பேசியதாவது, “இது என் குடும்ப விழா. நண்பர் என்பதையும் தாண்டி, இயக்குநராக அவரை இந்த மேடையில் பார்ப்பது பெருமையாக உள்ளது. விபத்து நடந்த ஒரு மாதத்திலேயே இவ்வளவு சீக்கிரம் தைரியத்தோடு திரும்ப வந்தவன் நீயாகதான் இருக்க முடியும். இந்த நம்பிக்கையே உன்னை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். ‘பிச்சைக்காரன்’ படத்தை பார்த்துவிட்டு உணர்ச்சிப்பூர்வமாக விஜய் ஆண்டனி வீட்டுக்கு காரில் சென்றேன். அப்படியான ஒரு படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு மடங்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, “விஜய் ஆண்டனி ஒரு நல்ல இசையமைப்பாளர் தானே, எதற்கு நடிப்பெல்லாம் என்று யோசித்தேன். பின்பு ‘பிச்சைக்காரன்’ படம் பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார். கமர்ஷியலாக இந்தப் படத்தின் எல்லையும் அருமையாக இருந்தது. சசி திறமையான இயக்குநர். அவரது ‘பூ’ படம் பார்த்து மிரண்டு விட்டேன். கடவுள் விஜய் ஆண்டனிக்கு இரண்டாவது வாழ்க்கை கொடுத்திருப்பது ஃபாத்திமாவுக்காகவும் ரசிகர்களுக்குக்காவும்தான். இன்னும் நீ இருந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இயக்குநர்களுக்கு ரைட்டர்ஸ் மிக முக்கியம். என்னுடைய பல படங்கள் வெற்றி பெற ரைட்டர்கள்தான் காரணம். அதுபோல விஜய் ஆண்டனிக்கு சசி என்னும் ரைட்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறார். நீ கண்டிப்பாக ஜெயித்து விடுவாய்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “படத்தின் கதாநாயகிக்கு என்னுடைய முதல் வணக்கம். என்னுடைய குருநாதர் பாரதிராஜா இருக்கும்போது ஏன் அவருக்கு முதல் வணக்கம் என்றால், விஜய் ஆண்டனி கடலில் விழுந்தபோது முதலில் குதித்து காப்பாற்றியவர் அவர்தான். அர்ஜூன் என்ற அசிஸ்டெண்ட் கேமரா பர்சனும் காப்பாற்றி இருக்கிறார். நான் முதலில் விஜய் ஆண்டனியை பார்த்தபோது அமைதியாக இருந்தார். பிறகு இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என அவர் வளர்ந்து நிற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது”.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “நான் முன்பே சொன்னதுபோல, ’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்” என்றார்.

கதாநாயகி காவ்யா தாப்பர் பேசியதாவது, “இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டனி- ஃபாத்திமாவுக்கு நன்றி. படத்தில் அனைவரும் சிறந்த பணியைக் கொடுத்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here