எனக்கு மியூசிக் பற்றி ஒன்றுமே தெரியாது; எங்கள் குடும்பத்தைப் பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்டேன்! -‘பிரியமுடன் ப்ரியா’ படவிழாவில் ஸ்ரீகாந்த் தேவா பேச்சு

கேட்கும்போது ஆடவைக்கும் உற்சாகமான பாடல்களைக் தருகிற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. அவர் இசையமைக்கும் 100-வது படமாக உருவாகியிருக்கிறது ‘பிரியமுடன் ப்ரியா.’ இந்த படத்தை AJ சுஜித் இயக்க, கதாநாயகனாக அசோக், கதாநாயகியாக லீசா நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 21.5. 2023 ஞாயிறன்று காலை சென்னையில் வடபழனியில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக ‘தேனிசைத் தென்றல்’ தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன்,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள்
எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணைச்செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது ‘‘என்னுடைய காட்ஃபாதர் அப்பாதான். எனக்கு மியூசிக் பற்றி ஒன்றுமே தெரியாது. எங்கள் குடும்பத்தைப் பார்த்து பார்த்து கற்று இப்போது 100-வது படத்தில் வந்து நிற்கிறேன். முதல் படம் வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோருக்கு நன்றி. தளபதி’ விஜய் படத்துக்கு வாய்ப்பளித்த பேரரசுவுக்கு நன்றி‌.

எனக்கு படிப்பு வராது அப்போது என்ன செய்ய போகிறாய் என அப்பா கேட்ட போது கீபோர்ட் வாங்கித்தர கேட்டேன். வாங்கித் தந்தார். அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து விட்டேன் என நம்புகிறேன்.

இந்த படத்தில் வானொலியின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடியது எனக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

தேனிசைத் தென்றல் தேவா பேசும்போது ‘‘இந்த படத்தில் வானொலி பாடலை ஸ்ரீகாந்த் இசையமைத்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் 100 படம் அமைந்தது முக்கிய காரணம் கே.ராஜன் தான். ஸ்ரீகாந்த், கே.ராஜனை மறக்க கூடாது. முதல் பட வாய்ப்பு மூலம் விளக்கேற்றி வைத்த தெய்வம். இது வெற்றிப்படம் நிச்சயமாக. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

கங்கை அமரன் பேசும்போது ‘‘ஸ்ரீகாந்த் தேவா 100 முடிந்து 101-வது தொடர வேண்டும். இந்த படத்தில் வாணி ஜெயராம் பாடியதை பார்த்து மனம் ஏதோ செய்தது. ஸ்ரீகாந்த் போட்ட பாடல்கள் எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் அசோக் பேசும்போது ‘‘இது குடும்ப விழா கொண்டாட்டமாக உள்ளது. இந்த படத்துக்கு பாடல்கள் அருமையாக அமைந்துள்ளது. எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடிய பாடல் ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது படத்துக்கு அமைந்தது ஸ்பெஷல். இந்த படம் தமிழ் தெலுங்கில் எடுக்கப்பட்டது. தெலுங்கு அந்தளவுக்கு தெரியாது கொஞ்சம் தான் தெரியும். அதைவைத்து டப்பிங் செய்தேன்” என்றார்.

மயிலாப்பூர் எம்எல்ஏ த..வேலு பேசும்போது ‘‘அரசியல்வாதியான நான் சினிமா விழாவில் கலந்து கொள்வது புதிய அனுபவம்.எங்கள் மயிலாப்பூர் மண்ணின் மைந்தன் ஸ்ரீகாந்த் தேவா. இசை என்றால் மயிலாப்பூருக்கு தனி இடம் உண்டு. தேனிசைத் தென்றல்’ தேவா அண்ணன் உற்சாகமானவர் உயர்ந்த தன்னம்பிக்கை கொண்டவர். அப்பா இருக்கும் மேடையில் பிள்ளைக்கு விழா என்பது மிகப் பெருமையான விஷயம். ஸ்ரீகாந்த் தேவா அமைதி புயல்” என்றார்.

கே.ராஜன் பேசும்போது ‘‘ஸ்ரீகாந்த் தேவா அவருடைய சம்பளத்தை தந்தையிடம் தான் கொடுக்க சொல்வார். பெற்ற தாயையும் தந்தையையும் போற்றி வணங்குபவர்கள் கடைசி காலம் வரை நன்றாக இருப்பார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ‘‘ திரைத்துறையை தற்போது காப்பாற்றி கொண்டிருப்பது இசைதான். இசை இல்லாமல் தமிழ் சமுதாயம் இல்லை. இசை இல்லாமல் தமிழன் வாழவே முடியாது. அந்த வரிசையில் ஸ்ரீகாந்த் தேவா 100 படங்களுக்கு இசையமைத்தது சாதாரண விசயம் அல்ல. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது ‘‘ஸ்ரீகாந்த் தேவாவின் பாஸிடிவ் எனர்ஜிதான் 100-வது படம் வரை அவரை கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும் ஒரு படம் ஹிட் ஆகவில்லை என்றால், அவன் செல்லாத காசாக ஆகி விடுவான். 2,000 ரூபாய் நோட்டு போல. இது தான் சினிமாகாரனின் வாழ்க்கையும். தடுக்கி விழுந்தால் யாரும் உதவ மாட்டான். இதுதான் சினிமா உலகம். அப்படி ஒரு உலகத்தில் 100-வது படம் கொடுப்பது சாதனை.
ரஜினி வளர்ந்து வரும் போது ப்ரியா ஹிட், விஜய் வளரும் போது ப்ரியமுடன், ப்ரியமானவளே ஹிட். இந்த படத்தில் 2 ப்ரியா இருக்கிறது அப்போது டபுள் ஹிட். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளரை விழா நாயகன் என்று சொல்வார்கள். ஆனால், இன்று இங்கு ஸ்ரீகாந்த் தேவா இவ்விழாவின் சாதனை நாயகன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here