சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறுவர் சிறுமியர் மன்றங்கள் இயங்கிவருகின்றன. அந்த மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், போட்டித் தேர்வு பயிற்சிகள், மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தப்படுகிறது. கடந்த 29.04.2023 அன்று சென்னை மெட்ரோ ரயிலில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்டு வரப்பட்டது. 09.05.2023 அன்று சென்னை துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படையின் சுஜய் ரோந்துக் கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக, சிறார் மன்றங்களை சேர்ந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று காவல்துறை உயரதிகாரி எம்.மனோகர் (காவல் இணை ஆணையாளர், மேற்குமண்டலம், சென்னை பெருநகர காவல்) ஏற்பாட்டில் 08.06.2023 அன்று காலை 9 மணிக்கு சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம் திரையிடப்பட்டது.படத்தை காவல் சிறார் மன்றத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்த சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு காவல் இணை ஆணையாளர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.