ஃபிரெண்ட் ஃபிகராக மாறினால் பின் விளைவு என்ன? நடிகர் ஆதியிடம் ‘பாட்னர்’ படக் கதையை விவரித்த இயக்குநர் மனோஜ் தாமோதரன்

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்னர்.’

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 1.7.2023 அன்று சென்னையில் நடந்தது. படக் குழுவினருடன், இயக்குநர்கள் ஏ. சற்குணம், தங்கம் சரவணன், தாஸ் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகர் ஆதி பேசுகையில், ”இந்த படத்தின் கதையை இயக்குநர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார்.‌ ‘ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்’ என்றார். ‘பெஸ்ட் ஃபிரண்ட்ஸ், ரூம் மேட்ஸ் மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட் அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.’ இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லி முழு கதையும் கேட்டேன். ஆனால் ஃபிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

நான் சீரியஸாக கதைகளை கேட்டு உணர்வு பூர்வமாக நடித்து வருபவன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு இயக்குநரிடம் இப்போது எடுக்க போகும் காட்சி என்ன? இதற்கு முன் காட்சி என்ன? நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும்? என கேட்டேன். அப்போது இயக்குநர், ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என்றார். அதற்குப் பிறகு எனக்கு புரிந்து விட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டேன்.

இந்த படத்தை குழந்தைகளுடன் திரையரங்குகளுக்கு சென்று, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பார்க்க வேண்டிய படம். ரொம்ப யோசிக்காமல் படம் பார்த்தீர்கள் என்றால் படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகை ஹன்சிகா பேசுகையில், ”இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் காமெடி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் மனோஜ் தாமோதரன் பேசுகையில், ”எனக்கு வேலை கற்றுக் கொடுத்த குருக்களான இயக்குநர்கள் தங்கம் சரவணன், சற்குணம், தாஸ் ராமசாமி ஆகியோருக்கு நன்றி. இது காமெடி படம். லாஜிக் இல்லாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இந்த படத்தின் டிரெய்லருக்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – சந்தோஷ் தயாநிதி
படத்தொகுப்பு – பிரதீப் ஈ. ராகவ்
கலை இயக்கம் – வி சசிகுமார்
தயாரிப்பு – ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் கோலி சூரிய பிரகாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here