‘பிரியமுடன் ப்ரியா’ சினிமா விமர்சனம்

அளவுக்கு மிஞ்சுகிற அனைத்துமே ஆப்புதான்‘ என்பதை எடுத்துச் சொல்லும் கதைக்களத்தில் தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு படைப்பு. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில் 100-வது படமாக ‘பிரியமுடன் ப்ரியா.’

அந்த இளைஞன் அந்த ‘எஃப் எம்’ வானொலியின் பிரபலமான ‘பிரியமுடன் ப்ரியா’ நிகழ்ச்சியில் பேசுகிற பெண்ணின் குரலுக்கு தீவிர ரசிகன். ஒருநாள் அவன் அந்த பெண்ணுடைய சகோதரியை வீடு புகுந்து கட்டிப் போடுகிறான். தான் நேசிக்கும் குரலுக்கு சொந்தமான பெண் எஃப் எம் மூலம் தன்னிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது ஆசை, பேராசை, வேண்டுகோள், கோரிக்கை, வலியுறுத்தல், வற்புறுத்தல்… அதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். அந்த சமயத்தில் அவனை சிறைப்பிடிக்க நெருங்கிய போலீஸார் இருவருக்கு பரலோகத்தின் பாதையைத் திறந்து விடுகிறான். ‘அவன் வெறுமனே மிரட்டவில்லை; சொன்னதைச் செய்து விடுவான்’ என்பது அவனது வெறியாட்டத்தின் மூலம் தெரிவருகிறது.

எஃப் எம் தொகுப்பாளினி, இரண்டு குழந்தைகளுடன் அவன் பிடியில் சிக்கிய தன் சகோதரியை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறாள். அந்த முயற்சிகள் பலனளித்ததா இல்லையா? கொலை செய்கிற அளவுக்கு அவனை மாற்றியது காதலா, காமமா? என்கிற சிலபல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக சீறிப் பாய்கிறது திரைக்கதை… இயக்கம் ஏ ஜே சுஜித்

பிரபலங்களை பெரியளவில் நேசிப்பவர்கள் செய்கிற கிறுக்குத் தனங்களை கச்சிதமாக செய்கிற, எப் ஃஎம்’மில் கேட்ட குரலை நேசித்து நேசித்து இனி அது கிடைக்காது’ என தெரியவரும்போது சைக்கோ மனநிலைக்கு ஆளாகிற வேடத்தில் அசோக். ஒரு பக்கம் குரலுக்காக கெஞ்சுகிற கொஞ்சல் மொழி, இன்னொரு பக்கம் ஆக்ரோஷம் காட்டுகிற விழி என நடிப்பில் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

சற்று முன் மலர்ந்த பூவைப் போல் புத்துணர்ச்சி ததும்புகிற அழகுக்குச் சொந்தக்காரராக, எம்ஃஎம் தொகுப்பாளினியாக ஷீலா. கிறங்கடிக்கும் புன்னகை வீச்சு, கண்களில் கவிதைப் பேச்சு என கவர்பவர், தனக்கு நடிக்கவும் வரும் என்பதை பதட்டம் சூழ்ந்த காட்சிகளில் நிரூபித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் பால்கோவாவில் செய்தது போல் இரண்டு குழந்தைகள்… அதில் பேசும் திறனற்ற மூத்த குழந்தை தங்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பது எப்படி என யோசிப்பதை முகபாவங்களில் காட்டும் விதம் கொள்ளை அழகு. அந்த குட்டிக் குழந்தை தன் தங்கைக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என பரிதவிக்கும் காட்சிகள் நெகிழ்ச்சி!

எஃப் எம் சேனல் எம்டியாக தலைவாசல் விஜய், காவல்துறை உயரதிகாரியாக சுரேஷ் என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களின் தேர்ந்த நடிப்பு கதையோட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது.

‘நைட்டிங்கேல்…நைட்டில் நானே’ பாடலின் துள்ளளிசை மூலம் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்குத் தயார்படுத்தி, ‘பிம்பிளிக்கி பிளாப்பி’ பாடலில் உற்சாக அதிர்வலைக்குள் தள்ளியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அவரது இந்த 100-வது படத்தில், வானொலியின் அருமை பெருமைகளை விவரிக்கும் பாடலை சீனியர் பாடகிகள் வாணி ஜெயராம் எல் ஆர் ஈஸ்வரி இணைந்து பாடியிருப்பது அவருக்கும் படத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை!

பரபரப்பான கார் சேஸிங் காட்சியை தன் கேமராவின் துரத்தலால் விறுவிறுப்பூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷா!

படத்தின் திரைக்கதை, ‘இதுக்கெல்லாமா ஒருத்தன் கொலை செய்கிற அளவுக்கு இறங்குவான்’ என யோசிக்க வைக்கும்தான். அப்போது, ‘சைக்கோக்கள் உருவாக, சரமாரியாக கொலைகள் செய்ய பெரிதாய் காரணங்கள் தேவையில்லை; சிறு சீண்டலே போதும்’ என்ற உண்மையை அசைபோடுவது அவசியம்! இல்லாவிட்டால் பிரியமுடன் பிரியாவை நேசிப்பது சிரமம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here