‘ஈரம்’, ‘அனந்தபுரத்து வீடு’, ‘அழகிய அசுரா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பல்லவபுரம் மனை எண் 666.’
‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரிஷி இந்த படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ‘ஆண்டவ பெருமாள்’, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனிவிழும் நிலவு’, ‘திரைக்கு வராத கதை’, ‘ழகரம்’, ‘துரிதம்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ரக்ஷை, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை ஆகியோரும் நடித்துள்ளனர்.
முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படமாக ‘அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை தமிழகமெங்கும் ‘ஶ்ரீ பஞ்சாட்சரம் ஃபிலிம் மேக்கர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குநர் ரிஷியிடம் பேசியபோது, ‘‘வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). அவனது மனைவி இறந்த பிறகு, தனது ஆறு வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜாப்பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள். அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது.
ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. தன் மகளை பார்க்க தருண் சென்னைக்கு வருகிறான். அவன் தனது வீட்டிற்கு வந்தது முதல், பல்வேறு அசாதாரண நிகழ்வுகளையும், துன்பங்களையும், அந்த ரோஜா பூவில் உள்ள ஆன்மாவால் அனுபவிக்கிறான்.
ஏன் ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழி வாங்கத் துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிப் பிழைத்தானா? இந்த கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை” என்றார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
கதை – எஸ் .முத்துபழனியப்பன்
ஒளிப்பதிவு – வில்லாலன்
இசை – மாருதி நம்பி
பாடல்கள் – முத்துபாரதி, சிந்துநதி பூ’ செந்தமிழன்
எடிட்டிங் – ஆர் டி அண்ணாதுரை
நடனம் – சம்பத்ராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – சாலைப்பட்டி என் பி மனோகரன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்