நடிகர் வைபவ், அவரது சொந்த அண்ணன் சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடிப்பில், இளங்கோ ராம் இயக்கியிருக்கும் ‘பெருசு’ திரையரங்குகளில் மார்ச் 14 அன்று வெளியாகிறது. முன்னதாக டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் வைபவ், “பெருசு குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பரான கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் இளங்கோ ராம், “‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.
நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எப்படி படமாக்கப் போகிறார்கள் என்று ரொம்ப யோசித்தேன். அடல்ட் காமெடியை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுளிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். ’பெருசு’ நின்னு பேசும்” என்றார்.
நடிகை சாந்தினி, “இந்த வருடத்தில் நான் நடித்த மூன்றாவது படம் ரிலீஸாகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் படத்தை நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம்” என்றார்.
விநியோகஸ்தகர் சக்திவேலன், “படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா இன்னொரு மனோரமா மாதிரி. இவங்களும் தீபாக்காவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நான்தான் வைபவும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் அதை சுவாரசியமாகவும் முகம் சுளிக்காத விதமாகவும் எடுப்பார்கள். அப்படித்தான் ‘பெருசு’ உருவாகியுள்ளது” என்றார்.
நடிகை நிஹாரிகா, எழுத்தாளர் பாலாஜி, நடிகை தனலட்சுமி, நடிகர் சுவாமிநாதன், நடிகர் கஜராஜ், நடிகர் கருணாகரன், நடிகர் முனீஷ்காந்த், நடிகர் கிங்க்ஸ்லி உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.