தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செயலாளர் ஆ.ஜான் வரவேற்று பேசினார். முந்தைய நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. தலைவர் N.விஜயமுரளி அவர்கள் யூனியன் செயல்பாடுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமை ஏற்று நடத்தும் ‘கலைஞர் 100′ விழாவில் பெப்சியில் உள்ள 23 சங்கங்களுடன் இணைந்து நமது யூனியனும் இணைந்து பணியாற்றுகிறது என்று பேசினார். பொருளாளர் B.யுவராஜ் செயலாளர் A.ஜான் , துணைத் தலைவர்கள் வி கே சுந்தர், இணைச் செயலாளர்கள் வெங்கட், கே. செல்வகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர், உறுப்பினர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்.
இந்த நிகழ்வில் இயக்குநர் அமீர் பேசும்போது, “நான் திரைத்துறைக்கு வந்த காலத்திற்கு முன்பு இருந்த மூத்த உறுப்பினர்களும் இங்கே இருக்கிறார்கள். நான் திரையுலகில் நுழைந்த பிறகு என்னுடன் இணைந்து அந்த காலகட்டத்தில் பயணித்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 70% பேரை எனக்கு நேரடியாகவே தெரியும்.
பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டும் தான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். ஏனென்றால் அது நான் படித்த இடம். நமக்கென ஒரு அடையாளம் வெளியில் தான் கிடைத்திருக்கிறதே தவிர பள்ளியில் கிடைத்தது கிடையாது. காரணம் நான் ஒன்றும் முதல் ரேங்க் மாணவனும் அல்ல. பத்திரிகையாளர் சங்கமும் பத்திரிகை மக்கள் தொடர்பாக சங்கமும் எனக்கு எப்போதுமே குரு போன்றவர்கள் தான். என்னை போன்றவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
டைமன்ட் பாபு, விஜயமுரளி போன்ற மூத்த உறுப்பினர்கள் என் போன்றவர்களின் கைகளில் இருந்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும். இதன் மூலம் என்னை நீங்கள்தான் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் இதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன்.
புகைப்படம் எடுக்கும் சமயத்தில் அப்படியே இருங்கள் என புகைப்படக்காரர்கள் கூறியதும் ,”நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம்” என உங்கள் தலைவர் விஜயமுரளி கூறினார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம், வருபவர்கள் தான் மேலே ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற அர்த்தமும் ஒன்று. அது அப்படியே தான் இருக்கும். காரணம் நாமாக தேர்ந்தெடுத்த துறை. தயாரிப்பாளர், இயக்குனர் பத்திரிகையாளர் என எல்லாமே நாம் தேர்ந்தெடுத்தது தான்.
இந்த துறை அனைவரும் சேர்ந்து வேலை செய்யும் துறையாக இருந்தாலும் மக்களிடத்தில் செல்லும்போது நடிகர்களுக்கு தான் முன்னுரிமை. ஏனென்றால் தங்களுடைய கவலையை மறந்து திரையரங்குகளுக்கு வந்து ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள் என்றால் தங்களது ஆதர்ச நாயகர்கள் அல்லது நாயகிகளுக்காகத்தான். எந்தத் துறையில் இருந்தாலும் ஆத்ம திருப்தியுடன் தான் வேலை செய்கிறோம். நம்மை பலர் கடந்து சென்றாலும் அவர்கள் நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் என்கிற ஆத்ம திருப்தி தான் கடைசி வரை கூட வருமே தவிர, பணமும் புகழும் அல்ல.
நம் முன்னால் செல்வதற்கு பல பாதைகள் இருக்கின்றன. எதில் செல்ல போகிறோம் என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். இப்படி தேர்ந்தெடுத்த இந்த பாதையில் ஒருவரை காலி செய்து மேலே போவது என்பது ஏற்புடையதல்ல. அது எந்த துறையாக இருந்தாலும் சரி. இன்னொருவருடைய வாய்ப்பை தட்டிப் பறிப்பது கூடாது. அதுபோன்ற சில செய்திகளை கேள்விப்படுகிறோம். அப்படியே உங்களுக்கு அது நடந்தால் கூட அது ஒரு முறை தான் நடக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் திறமை தான் ஜெயிக்க வேண்டும்.
நான் முதல் படம் பண்ணும்போது டைமன்ட் பாபு சாரிடம் பேசி இருக்கிறேன். அப்போது ஒரு புது பட இயக்குநர் என நினைக்காமல் என்னிடம் எப்படி பேசினாரோ இப்போதும் அதேபோலத்தான் இருக்கிறார். இந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தியது அவரது அணுகுமுறைதான். தனது தொழில் மீது அவர் வைத்திருந்த பக்தியும் நம்பிக்கையும் தான். அப்படி இல்லாமல் குறுக்கு வழியில் செல்லலாம் என நினைத்தால் அது உடனடி சந்தோஷமாக இருக்குமே தவிர, நிரந்தர சந்தோஷமாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
மற்றபடி இந்த யூனியன் சிறப்பாக செயல்பட எல்லா காலகட்டத்திலும் உங்களுடன் நான் உறுதுணையாக இருபேன். அதனால் நீங்கள் எந்த நிகழ்ச்சி, எந்த தேவை என்றாலும் என்னை அணுகலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.