அப்பா விஜயகாந்த் இந்த படத்தின் கதையை கேட்டார்; படத்திலுள்ள இரண்டு சண்டைக் காட்சிகளையும் அவர் பார்த்தார்! –‘படை தலைவன்’ பட விழாவில் நாயகன் நடிகர் பாண்டியன் பேச்சு

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள ‘படை தலைவன்’ வரும் மே 23-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல் கே சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் கஸ்தூரி ராஜா, சசிகுமார், ஏ ஆர் முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் யூகே அன்பு, ஒளிப்பதிவாளர்  சுரேஷ், தயாரிப்பாளர்கள் டி சிவா, ஜெ எஸ் கே சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் ”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.

என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான். எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும்” என்றார்.

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ”அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை” இப்படம் மக்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ வெங்கடேஷ்,  எஸ் எஸ் ஸ்டான்லி, லோகு எ பி கே எஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here