விமல் நாயகனாக நடிக்க, இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ள ‘பரமசிவன் பாத்திமா’ வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இசக்கி கார்வண்ணன், “இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள்” என்றார்.
விமல், “வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர், “நான் இப்படத்தில் புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார்.
முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்” என்றார்.
சாட்டை துரைமுருகன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி” என்றார்.
நாயகி சாயாதேவி, பாடலாசிரியர் ஏகாதசி, ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார், நடிகை சேஷ்விதா ராஜு, இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, இயக்குநரும் எழுத்தாளருமான சுகா, நடிகர் காதல் சுகுமார், நடிகை ஆதிரா, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் பிரசாத் முருகேசன், இயக்குநர் மனோஜ் குமார், நடிகர் விமல்ராஜா (வி ஆர்), நடிகர் கூல் சுரேஷ், நடிகர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள்.

