பி.டி. சார் சினிமா விமர்சனம்

காலங்காலமாக கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களை, பாலியல் வன்முறைகளை எடுத்துக் காட்டும் படங்களின் வரிசையில் ‘பி.டி.சார்.’

கல்லூரி மாணவி ஒருவரிடம் தரங்கெட்ட இளைஞர்கள் சிலர் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவள், அவர்களிடமிருந்து லேசான ரத்தக் காயத்துடன் தப்பி வீட்டுக்கு போய் சேர்கிறாள். அப்படியொரு கேவலமான செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு, அவர்கள் அப்படி நடந்து கொண்டதற்கு அவள் உடுத்தியிருந்த ஆடை காரணமென்று சொல்லி அவளுடய அம்மாவிலிருந்து பலரும் திட்டித் தீர்க்கிறார்கள்.

அது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் இளைஞர்கள் அவளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதனால், அக்கம் பக்கத்தினரின் ஏச்சுப் பேச்சுகளால் அவமானத்துக்கு ஆளாகி மனம் நொறுங்கிப்போகும் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.

இந்த விவகாரத்தில், அவளை அவள் படிக்கும் கல்லூரியின் சேர்மன் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் அதே கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பி.டி.சார். எளிமையான குடும்பப் பின்னணி கொண்ட பி.டி.சார் போட்ட வழக்கை, பல்லாயிரம் கோடிகளில் புரள்கிற, ஊர் முழுக்க செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிற சேர்மன் புகழ்பெற்ற வழக்கறிஞரை வைத்து சுலபமாக உடைத்தெறிகிறார்.

பி டி சார் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அவர் வசமிருந்து ஆதாரம் ஏதுமில்லாத சூழலில், இறந்து போன பெண்ணே வந்து சாட்சி சொன்னால்தான் நம்ப முடியும் என்று கருத்து தெரிவித்து, அதற்கு வாய்ப்பில்லாததால் சேர்மனை நிரபராதியாக கருதி வழக்கிலிருந்து விடுவிக்கும் முடிவுக்கு வருகிறது நீதிமன்றம்.

இப்படி நகரும் விறுவிறுப்பான கதையில், உண்மையில் அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? பி.டி.சார் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்க முடிந்ததா இல்லையா? உண்மையான குற்றவாளி யார்? என்பதுதான் கிளைமாக்ஸ்… இயக்கம் கார்த்திக் வேணுகோபாலன்

கல்வித் தந்தையொருவரை வில்லனாக காட்டியிருக்கிற இந்த படத்தை, வேல்ஸ் கல்வி நிறுவன அதிபர் தாயாரித்திருக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய சங்கதி.

பி.டி.சாராக ஹிப் ஹாப் ஆதி. அப்பா அம்மாவால் வம்பு தும்புக்கு போகக்கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டு, அதன்படியே நடந்து கொள்கிற அவர், தன்னை அண்ணா என பாசமாக அழைக்கும் அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிப்படையும்போது வேறொரு பரிமாணத்துக்கு தாவுகிறார். காலேஜ் சேர்மனுடன் மோதுவதில் துணிச்சல், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனம், இடையிடையே சக ஆசிரியருடன் காதல் என கச்சிதமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் ஆதியிடமிருந்து வெளிப்படுகிறது அன் லிமிடெட் எனர்ஜி.

கல்லூரி சேர்மனாக தியாகராஜன். குற்றச் செயல்களை குதூகலமாகச் செய்கிற பாத்திரத்தில் அதற்குத் தேவையான உருட்டலும் மிரட்டலுமான வில்லத்தனத்தை கச்சிதமாக இறக்கி வைத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக வருகிற அனிகா சுரேந்திரன் கண்களில் காட்டும் கோபம், முகபாவத்தில் காட்டும் இயலாமை, பரிதாபம் என அத்தனையும் கதைக்குஉயிரோட்டம் தர,

ஆதியின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, அம்மாவாக தேவதர்ஷினி, அனிகாவின் அப்பாவாக இளவரசு, அம்மாவாக வினோதினி, ஆதியின் நியாயமான கோபத்துக்கு ஆதரவாக நின்று நீதிமன்றத்தில் வாதாடுகிற வழக்கறிஞராக இளைய திலகம் பிரபு, சேர்மன் சார்பில் வாதாடுகிற ஒய் ஜி மதுவந்தி, ஆசிரியராக முனீஷ்காந்த், சேர்மனின் பி.ஏ.வாக நக்கலைட்ஸ் பிரசன்னா என நீள்….கிறது நடிகர் நடிகைகளின் பட்டியல். அத்தனை பேரின் பங்களிப்பும் நிறைவு.

நீதிபதியாக வருகிற பாக்யராஜ், அவரது வழக்கமான நையாண்டி எட்டிப் பார்க்கும் விதத்தில் என்ட்ரீ கொடுப்பது கேலிக்கூத்தாக இருந்தாலும், வழக்கு விசாரணையில் தந்திருக்கும் நடிப்பு நேர்த்தி.

ஆதியுடன் பணிபுரியும் சக ஆசிரியராக காஷ்மிரா பர்தேசி. ஒல்லியான தேகத்துக்கும், வசீகர முகத்துக்கும் சொந்தக்காரரான அவர், தமிழ் சினிமாவில் ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் பிழையின்றிச் செய்திருக்கிறார். நடிப்பைத் தாண்டி அதிகம் கவர்கிறது விழிகளில் காட்டும் துறுதுறுப்பு.

சுட்டி அரவிந்தின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் தனித்துவம்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்களில் உற்சாகத்துக்கு குறைவில்லை. பின்னணி இசையில் விறுவிறுப்பான காட்சிகளுக்கு ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடல் வரிகளைக் கோர்த்து விட்டிருப்பது சுறுசுறுப்பின் சதவிகிதத்தை கூட்டுகிறது. இது ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் 25-வது படம் என்பது விஷேச தகவல்!

கல்லூரி வளாகம், நீதிமன்றம் என சுற்றிச் சுழலும் கதைக்களத்தை கதையின் நீள அகலங்களுக்கேற்ப பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.

பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் ஆசிரியைக்கு ரூட் விடுவதாக வைத்திருக்கும் காட்சிகளையெல்லாம் சத்தியமாய் காமெடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த காட்சிகளைப் பார்க்கும்போது எரிச்சல் வருவதோடு ‘எடுத்துக் கொண்ட கதைக்கருவை இயக்குநர் மறந்து விட்டரோ?’ என்ற சந்தேகமும் எட்டிப் பார்க்கிறது.

கதைக்களம் பழையது என்றாலும் திரைக்கதையிலிருக்கும் சிலபல திருப்பங்கள் படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன. உருவாக்கத்தில் குறைகள் சில இருந்தாலும், ‘பி.டி.சார்’ நடத்தியிருக்கும் பாடத்தில் தரம் அதிகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here