‘பாம்பாட்டம்’ சினிமா விமர்சனம்

ராஜ வம்சத்தை சூழ்கிற சிக்கல், அரங்கேறுகிற சதி, ஜோதிடம், ஆன்மிகம், பாம்புகளின் படையெடுப்பு, விசுவாசமிக்க மக்கள் என ஃபேண்டசி படைப்புக்கான அத்தனை அம்சங்களும் பின்னிப் பிணைந்த ‘பாம்பாட்டம்.’

இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலகட்டம். அந்த பிரமாண்ட சமஸ்தானத்தை ஆள்கிற ராணி மல்லிகா ஷெராவத், தான் பாம்பு கடித்து மரணமடைவோம் என்பதையறிந்து அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க உத்தரவிடுகிறார். பாம்புகள் கொத்துக் கொத்தாய், கூட்டம் கூட்டமாய் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. பிடியில் சிக்காத பாம்பொன்று மகாராணியை பரலோகத்துக்கு அனுப்பி வைக்கிறது.

அந்த பாம்பால் மகாராணியின் மகளுக்கும் ஆபத்து என்பதால் அந்த ராஜ குடும்பம் சமஸ்தானத்தை விட்டு வெளியேறுகிறது.

அந்த அரண்மனையில் ராணியின் ஆவி சுற்றுவதாகவும், ராணியைக் கொன்ற பாம்பு அங்கேயே வசிப்பதாகவும் ஊர் முழுக்க பேசிக் கொள்ள, காவல்துறை அதிகாரி ஜீவன் அரண்மனைக்கு வருகிறார். அங்கு நிலவும் மர்மங்களின் பின்னணியை அலசி ஆராய்கிறார்.

முன்னர் நடந்தது, அப்போது நடப்பது, அடுத்து நடக்கப் போவது என அனைத்தையும் அறிந்துகொள்கிறார். அந்த ராட்சத பாம்பை கொல்லவும் துணிகிறார்.

ஜீவன் யார் என்பதும், அவரது துணிச்சலின் விளைவு என்ன என்பதுமே மிச்சமீதி கதை. இயக்கம் வடிவுடையான்

பிரமாண்ட அரண்மனை, ராட்சத பாம்பு, ஆன்மிகம் என கலந்துகட்டி திரைக்கதைக்கு வெறியேற்றியிருக்கிறார் இயக்குநர் வடிவுடையான்.

ராணியாக வருகிற மல்லிகா செராவத் கம்பீரத் தோற்றம், கனல் கக்கும் பார்வை என மிரட்டுகிறார்.

இளவயது ஜீவன் துறுதுறுப்பாக வலம்வர, அவருக்கு அப்பாவாக காவல்துறை அதிகாரியாக வருகிற ஜீவனின் தோற்றத்திலிருக்கும் முதிர்ச்சி கவனிக்க வைக்கிறது. இரு வேடங்களுக்கான நடிப்பிலும் நல்ல தேர்ச்சி!

இளவரசியாக வருகிற ரித்திகா சென்னின் பயமும் பதட்டமும் ஈர்க்கிறது.

சுமன், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, சரவண சக்தி, சலீல் அங்கோலா, பருத்தி வீரன் சரவணன் என ஏராளமான நடிகர், நடிகைகள் ஏற்ற பாத்திரங்களில் சரியாகப் பொருந்தியிருக்க,

சிஜி குழுவின் உழைப்பில் அனகோண்டா ரக பாம்புகளின் சீற்றம் மிரட்டுகிறது. அரண்மனையின் பிரமாண்டம் அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

அத்தனை காட்சிகளிலும் பின்னணி இசைமூலம் அதிரடி சரவெடி பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார் அம்ரிஷ். பாடல்களிலும் உற்சாகம் புரள்கிறது.

காட்சிகளின் பிரமாண்டத்தில் கொஞ்சம் கொஞ்சம் ஹாலிவுட் ஃபேண்டசி படங்களின் வாசனை ஒட்டிக் கொண்டிருக்க, இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவில் அதற்கேற்ற தரம் தாராளமாய் தஞ்சம் புகுந்திருக்கிறது.

லாஜிக் அதுஇதுவென யோசிக்காமல், ‘இதுவொரு ஃபேண்டசி படம்’ என்ற நினைப்போடு பார்த்தால் பாம்பாட்டம் மனதுக்குள் போடவைக்கும் குஷியாட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here