‘பானிபூரி’ வலைத்தொடர் (Web Series) விமர்சனம்

‘லிவ் – இன் ரிலேஷன்ஷிப்’பை கதைக்களமாக்கி மற்றுமொரு படைப்பு. ShortFlix ஓடிடி தளத்தில் இப்போது காணக்கிடைக்கிற ‘பானிபூரி.’

Series link : shortflix.page.link/EZHj

அந்த இளைஞனும் இளம்பெண்ணும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளலாம் என அவன் நினைக்கும்போது அவள் மறுக்கிறாள். ‘காதலித்தது போதும்; பிரிந்து விடலாம்’ என்கிறாள். அவன் தவித்துப் போகிறான். இந்த பிரச்சனை பெண்ணுடைய அப்பாவிடம் போக, அவர் இருவரையும் உட்கார வைத்துப் பேசுகிறார்.

தன் மகளுடைய தோழி பல வருடங்கள் ஒருவரை உயிருக்குயிராய் காதலித்ததும், பிறகு அவருடன் மண வாழ்க்கையில் இணைந்து ஆறே மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிற நிலைக்கு தள்ளப்பட்டதும் தெரியவருகிறது. தன் மகள் தனக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற குழப்பத்தில் காதலனை பிரிகிற முடிவுக்கு வந்திருப்பதை புரிந்து கொள்கிறார். மகளைக் காதலிக்கும் இளைஞன் நல்லவன் என்பதை தெரிந்து கொள்கிறார்.

‘கொஞ்சநாள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து பாருங்கள். ஒத்து வராது என்றால் அதன்பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாமே?’ என அப்பா ஆலோசனை சொல்ல மகள் ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் ஓருவார காலம் சேர்ந்து வாழ முடிவெடுத்து நகரத்திலிருந்து வெகுதொலைவிலிருக்கும் அபார்ட்மெண்ட்க்கு போகிறார்கள்.

அவர்களின் அந்த ஒரு வார சுதந்திர வாழ்க்கை எப்படி நகர்கிறது, என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், அவர்களுக்குள் எப்படியான புரிதல்கள் ஏற்படுகிறது என்பதெல்லாம் காட்சிகளாக விரிய அத்தனையும் சுவாரஸ்யம்… ஒருவாரத்துக்கு பின் அவர்கள் எடுத்த முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

நவநாகரிக இளைஞன், நல்ல படிப்பு, நல்ல வேலை, சொகுசு வாழ்க்கைக்கேற்ற சம்பளம் என ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு நடை, உடை பாவனைகளால் உயிரூட்டியிருக்கிறார் லிங்கா. கண்டதையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு தன்னை நோகடிக்கும் காதலியோடு மல்லுக்கட்டுவதாகட்டும், ‘அந்த’ விஷயத்துக்கு ஆசைப்பட்டு காதலி தடை போட்டுவிட அதையும் தாண்டி சந்தர்ப்பம் சாதகமாக அமையும்போது எடுக்கும் முடிவாகட்டும் அத்தனையும் நேர்த்தி.

பெரிய சைஸ் தலையணை போல் செழுமையான இளமையைச் சுமந்திருக்கிற சாம்பிகாவின் வளமான நடிப்பு தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்காக காதலனிடம் சண்டையிடுவது, ‘சரி வா கிஸ் பண்ணலாம்’ என களமிறங்குவது, அப்பாவிடம் அனைத்தையும் கலந்துபேசுவது, வெகுநாள் பிரிந்திருந்த அம்மாவை சந்திக்கும்போது அவரை ஏற்க முடியாத மனநிலைக்குள் விழுவது என காட்சிக்கு காட்சி கவர்கிறார்.

மனைவியைப் பிரிந்தவராக, மகளின் விருப்பத்தை புரிந்து வழி நடத்துபவராக ‘இப்படி கூட ஒரு அப்பா இருப்பாரா?’ என நினைக்கும்படியான கதாபாத்திரத்தில் வருகிற இளங்கோ குமரவேலின் தேர்ந்த நடிப்பு ஈர்க்கிறது. காதலனைப் பிரிய முடிவெடுத்த விஷயத்தில் தன் மகளைப் பற்றி அவர் புரிந்துகொண்டதையும் தாண்டி வேறொரு காரணம் இருப்பது திரைக்கதையிலிருக்கும் திருப்பம்.

அபார்ட்மென்ட் அசோசியேஷன் பொறுப்பாளர்களாக வருகிறவர்களில் மலையாளி பாத்திரம் ஏற்றிருப்பவரின், எதை செய்வதானாலும் ரெண்டு நிமிட அவகாசம் கேட்கும் இயல்பு ரசிக்க வைக்கிறது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வசனம் பேசிக் கொண்டிருக்கும் வேலைதான் என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார் கனிகா.

ஹீரோவுக்கு நண்பனாக வருகிற வினோத் சாகரின், விசாரணைக்கு பயப்படும் சுபாவம் கலகலப்பூட்டுகிறது. ‘நமக்கு காதல் கீதலெல்லாம் கை கூடாது’ என்ற முடிவுக்கு வந்து பக்குவப்பட்ட விரக்தியிலிருக்கும் அவருக்கு ஒருகட்டத்தில் வாழ்க்கைத் துணை அமைவது அழகு.

ஹீரோவுக்கு அண்ணனாக வருபவரின் அலட்டலற்ற நடிப்பு மனதில் நிற்கிறது.

போகிறபோக்கில் ‘ஃபுட் டெலிவரி’ செய்யும் இளைஞனை வைத்து குட்டியாய் சித்தரித்திருக்கும் காதல் காட்சியில் உயிரோட்டமிருக்கிறது.

கதையின் ஒரு கதாபாத்திரமாக வரும் ரோபோ ‘ஜூனோ’வும் கவர்கிறது.

பின்னணி இசை காட்சிகளின் நகர்வுக்கு பொருத்தமாக இருக்க,

திரைக்கதையிலிருக்கும் சுவாரஸ்யம் மிகச்சில கேரக்டர்களை வைத்துக் கொண்டு, ஒன்றிரண்டு வீடுகளின் ஒருசில அறைகளை மட்டுமே கதை நிகழ்விடங்களாக அமைத்துக் கொண்டு சலிப்பு தராமல் எட்டு எபிசோடுகளை நகர்த்த உதவியிருக்கிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற ‘லிவ் – இன் ரிலேஷன்ஷிப்’பை மையப்படுத்திய கதைகளை பல திரைப்படங்களில் பார்த்தாயிற்று. அப்படியான படைப்புகள் ஓடிடி’ தளங்களுக்காக தயாராகும்போது சென்சார் கட்டுப்பாடு இல்லாததை சாதகமாக்கி காட்சிகள் எல்லைமீறிப் போவதும், அவை முகம் சுளிக்க வைப்பதும் தொடர்கதையாகியிருக்கிற சூழலில்,

அதே சப்ஜெக்டை கையிலெடுத்து கண்ணியத்தோடு இயக்கியிருக்கிற பாலாஜி வேணுகோபால் கண்டிப்பா பாராட்டுக்குரியவர்!

எல்லாம் சரி… தொடருக்கு பானிபூரி என்ற தலைப்பு வைத்ததன் காரணம்? ஹீரோவின் கதாபாத்திரப் பெயர் சித்தார்த் தண்டபாணி; ஹீரோயின் பெயர் பூர்ணிமா. ஹீரோயின், தண்டபாணி என்பதில் இருக்கும் பாணியை செல்லப் பெயராக்கி அவனை பாணி பாணி என்றழைக்க, அவனோ பூர்ணிமாவை சுருக்கி பூரி பூரி என்றழைக்க இரண்டையும் இணைத்துப் பாருங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here