வெற்றியை ருசிக்க முடியாமல், வசூல் குவிக்க முடியாமல் தமிழ் சினிமாவுலகம் டார்க்’காகியிருக்கிற சூழலில் ‘பார்க்’க்கும் படியான ஒரு படத்தை ‘ஆவி’ பறக்கப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் இ கே முருகன்.
ஹீரோவும் ஹீரோயினும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் எதேச்சையாக நடக்கும் சந்திப்புகளால் அந்த தருணங்கள் தித்திப்பாகிறது.
ஹீரோவும் ஹீரோயினும் கலந்து கொண்ட குலுக்கல் போட்டியொன்றில் ஹீரோவுக்கு ஸ்கூட்டி பரிசாக கிடைக்க, ஹீரோயினுக்கு பைக் வந்துசேர, வாகனங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இள நெஞ்சங்களுக்குள் காதல் தீ பற்றிக் கொள்ள, டூயட் அது இதுவென கொஞ்ச நாள் கொஞ்சும் நாட்களாக உற்சாகமாக கடந்தபின், மாலை மாற்றிக் கொள்ள நாள் குறிக்கப்படுகிறது.
அந்த நேரமாகப் பார்த்து விபரீத சம்பவம் ஒன்று நடக்க, ஆவிகள் பதுங்கியிருக்கிற ‘பார்க்’கில் நுழைகிறது தமன், ஸ்வேதா ஜோடி. இதுதான் சந்தர்ப்பம் என்று, அந்த ஆவிகள் அவர்களின் உடலில் நுழைகிறது…
கதையின் ஒரு பாதி இப்படியாக கடந்தோட,
பார்க்கிலுள்ள ஆவிகளின் முன் கதை என்ன, காதல் ஜோடியின் உடலை ஆவிகள் ஆக்கிரமித்ததன் காரணம் என்ன என்பதெல்லாம் மிச்சம் மீதி…
இளமை துள்ளுகிற தமன் குமார், ஸ்வேதா டோரத்தியின் ஜோடிப் பொருத்தம் அள்ளுகிறது. அலட்டலின்றி நடித்திருக்கிற அவர்களுக்கான டூயட் பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்களும், வானவில் குவியலாய் அவர்களை சுற்றி வளைத்த உடைகளும் கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து படைத்திருக்கின்றன. இருவரும் பேயாக தோன்றி பயமுறுத்துவதில் புதிதாய் கவன ஈர்ப்பு சங்கதிகள் ஏதுமில்லை.
அமைச்சரின் மகனாக வருகிற யோகி ராமுக்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது, கொலைகள் செய்வது ஹேப்பியான ஹாபி. அந்த அநியாயக்காரர் தன்னைக் காப்பாற்ற முன் வந்த பெண் போலீஸிடம் டூ மச்’சாக ஆசைப்பட்டு, டுமீல் சத்தம் கேட்கும்வரை வில்லத்தனத்தில் ஓரளவு மிரட்டியிருக்கிறார். விஜித் சரவணன் உள்ளிட்ட அவரது கூட்டுக் குற்றவாளிகளின் பங்களிப்பில் குறையில்லை.
பார்க்கில் தஞ்சம் புகுந்த ஜோடி, பேயாக மாறி வஞ்சம் தீர்க்கிற சீரியஸான எபிசோடுகள் படத்தின் பின் பாதியைக் கைப்பற்றிக் கொள்ள, அதுவரையிலான ரிலாக்ஸுக்கு உதவியிருக்கிறார் பிளாக் பாண்டி. டிடிஎச் கனெக்சன் கொடுக்கப் போன இடத்தில், மண்டைக் கோளாறு பார்ட்டிகளிடம் சிக்கிக் கொண்டு அவரும் தமன் குமாரும் அடிபட்டு கடிபடும்போதும், பலான பெண்ணோடு கன்டெய்னருக்குள் போய் கண்டமாகாமல் தப்பிக்கிற போதும் சிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
கொஞ்ச நேரமே வந்தாலும் யோகி ராம் கூட்டணியின் காம வெறிக்குப் பலியாகும் காதல் ஜோடியும் கவர்கிறார்கள்.
ஹமாரா சி.வியின் பின்னணி இசை திகில் பயணத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது. பாடல்களில் தவழும் மெல்லிசை மனதுக்கு இதம் தருகிறது.
பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
அமானுஷ்யம், பாலியல் வன்முறை என கலந்து கட்டியிருக்கும் இந்த படத்தைப் பார்ப்பதில் எது கிடைக்கிறதோ இல்லையோ… ‘மனிதர்களை பேய், பிசாசு பிடித்துக் கொண்டால் பயப்பட வேண்டாம்; வந்த நோக்கம் நிறைவேறிவிட்டால் அவை நமக்கு பாதகம் செய்யாமல் கிளம்பிவிடும்’ என்ற தைரியம் கிடைக்கலாம்.
பார்க், ஸ்கிரீன் பிளேயில் இன்னும் கொஞ்சம் ஸ்பார்க் இருந்திருக்கலாம்!