காமெடி கலாட்டா, அதிரடி அடிதடி, அதீத வன்முறை, அசத்தலான குத்துப் பாட்டு என கதையை கண்டபடி கொத்து பரோட்டா போடாமல், சீரியஸான ஹாரர் ரூட்டில் முழுவீச்சில்’ பயணித்திருக்கிற ‘பேச்சி.’
ஓங்கி வளர்ந்த மரங்களோடு பரந்து விரிந்த அந்த காட்டை சுற்றிப் பார்க்க, அதன் அழகை ரசிக்க, போட்டோக்கள் எடுக்க, வீடியோவில் நிரப்ப ஆசைப்படுகிறது மூன்று இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் இணைந்த கூட்டணி. அவர்களை, காட்டின் நீள அகலங்கள் தெரிந்த காட்டின் ஆபத்துகளை அறிந்த இளைஞன் ஒருவன் வழிநடத்தி கூட்டிப் போகிறான்.
மனசு முழுக்க உற்சாகத்துடன் காட்டுக்குள் சுற்றித்திரியும் அவர்கள் கண்ணில் வித்தியாசமான ஒரு இடம் தென்படுகிறது. அவர்கள் அந்த பகுதிக்குள் நுழைய விரும்புகிறார்கள்.
‘அது ஆபத்தான பகுதி; அந்த பக்கம் போகாதீங்க’ என உடன் வந்த வழிகாட்டி எச்சரிக்கிறான். அவர்கள் அவன் பேச்சை மதிக்காமல் அத்துமீறுகிறார்கள். ஆபத்தில் சிக்குகிறார்கள்.
அது என்ன மாதிரியான ஆபத்து, ஆபத்துக்கு காரணம் என்ன என்பதே ‘பேய்ச்சி’யின் ஸ்கிரீன் பிளே… கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராதது. இயக்கம் பி ராமச்சந்திரன்
பளீர் நிறத்தில் லட்சணமாக இருக்கிற நாயகன் தேவ், அவருக்கு ஜோடியாக உடற்கட்டில் இளமையைத் தக்க வைத்திருக்கிற காயத்ரி சங்கர் இருவரின் கதையின் விறுவிறுப்புக்குத் தேவையான துடிப்பான நடிப்பைத் தர, அவர்களுடன் காட்டுப் பயணத்தில் கைகோர்க்கிற ஜனா, பிரித்தி நெடுமாறன் ஜோடியும், அந்த நால்வரின் நண்பராக போட்டோகிராபராக உடன் செல்கிற மகேஸ்வரனும் பயம் பதற்றம் என திரைக்கதையின் தன்மையுணர்ந்து சுறுசுறுப்பாக களமாடியிருக்கிறார்கள்.
காட்டை சுற்றிப் பார்க்க விரும்பியவர்களுக்கு துணையாக போய், தன் சொல்பேச்சு கேட்காத அவர்களுடன் மல்லுக்கட்டி பின்னர் பேச்சியின் பிடியில் சிக்கி சீரழியும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பால சரவணன்.
பேயாக காட்டின் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அலைந்து திரிந்து, நரபலிக்காக மனிதர்களை தட்டித் தூக்குகிற பேச்சிப் பாட்டி சீனியம்மாள் மிரட்டலான முகபாவம் காட்ட முயற்சித்திருக்கிறார்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும் காட்டின் பிரமாண்டமும் திகிலைக் கூட்ட, ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் உழைப்பால் காட்சிகளின் தரம் உயர்ந்திருக்கிறது.
பேய், நரபலி அதுஇதுவென பார்த்து பழகிய வழக்கமான பேய்ப்பட சங்கதிகளே அணிவகுத்தாலும்,
எளிமையான மிகச்சில நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு, இனி என்ன நடக்கும்? அடுத்த பலி யார்? பேச்சியின் முன் கதை என்ன? என்று அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதை படத்தின் பலம். பேய்ப்படம் என்றாலே பெரும்பாலான காட்சிகளில் இருள் சூழ்ந்திருக்கும் என்பதை மாற்றி வெளிச்சத்திலேயே அமானுஷ்ய அட்டகாசங்களை அரங்கேற்றியிருப்பது படத்தின் தனித்துவம்.
பேச்சி, சிறிய பட்ஜெட்டிலும் பயமுறுத்தலாம்; பரவசப்படுத்தலாம் என்பதற்கான சாட்சி!