பித்தல மாத்தி சினிமா விமர்சனம்

பொம்பளைப் பொறுக்கிகளை சினிமாவில் விதவிதமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுண்டு. பெண்களிலும் ஆம்பளைப் பொறுக்கிகள் உண்டு. அப்படி ஒரு பலான பார்ட்டியை தோலுரிக்கும் ‘பித்தல மாத்தி..’

உமாபதி ராமையா தள்ளுவண்டி மாதிரியான தண்ணி வண்டி மூலம் வீடுகளுக்கு வாட்டர் சப்ளை செய்கிறவர். அவருக்கு தொழிலிலும், அடிக்கடி தண்ணி போடுவதிலும் கம்பெனி கொடுப்பவர் பாலசரவணன். ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்யப் போன இடத்தில் உமாபதி, சம்ஸ்கிருதியை ‘அந்த’ கோலத்தில் கண்டு சிலிர்க்கிறார்; அவர் வெட்கத்தில் சிரிக்கிறார். அடுத்தது என்ன விழிகளின் வழியாக காதல் சப்ளைதான்…

நேர்மையான அரசு அதிகாரி என பெயர் பெற்று புகழின் உச்சியில் இருப்பவர் வினுதா லால். அவரை கம்பீர முன்னுதாரணமாக கொண்டிருக்கிற சம்ஸ்க்ருதிக்கு அந்த சிங்கப் பெண்ணின் அசிங்கமான பக்கம் தெரியவர, பின்னர் அது வெளியுலகத்துக்கும் பரவிவிட… அடுத்தது என்ன பழிவாங்கல் எபிசோடுகள்தான்…

உமாபதி ராமையா பொறுப்பாக தண்ணீர் சப்ளை செய்வது, பொறுப்பில்லாமல் குடிப்பது, ரொமான்ஸ் காட்சியில் அசடு வழிவது என ஏற்ற கேரக்டருக்கு அத்தனை பொருத்தம்.

திரட்சியான தேகம், மிரட்சியான விழிகள் சம்ஸ்கிருதியின் கச்சித காம்போ கவர்கிறது!

தம்பி ராமையா நிஜத்தில் உமாபதிக்கு அப்பா. அவரே படத்திலும் அப்பாவாக வந்தால் சென்டிமென்ட் தூக்கலாக இருக்க வேண்டுமே. அதுதான் இல்லை. தம்பி ராமையாவுக்கு, தேவதர்ஷினியுடன் காமெடி ஏரியாவில் டியூட்டி என்பதால் உமாபதியுடன் ஒட்டுறவு கம்மி.
ரத்தம் முழுக்க பதவித் திமிர், அங்கம் முழுக்க ஆணவம், அந்தரங்கம் வில்லங்கம் என கலந்துகட்டிய கதாபாத்திரத்தில் வியக்க வைக்கிறார் வினுதா லால்.

சேரன்ராஜை போலீஸாக மட்டுமே நடிக்க வைப்போம், அதுவும் கேடுகெட்ட போலீஸாக மட்டுமே காட்டுவோம்’ என இயக்குநர்கள் தீர்மானம் போட்டிருப்பார்களோ என்னவோ மனிதர் இந்தப் படத்திலும் டெம்ப்ளேட் பாத்திரத்தில் தெம்பாகத் திரிவது சலிப்பு!

வித்யூலேகா ஏற்கனவே பலசுற்று பெருத்தவர் வஞ்சனையின்றி இன்னொரு சுற்று வளர்ந்திருக்கிறார். அவரது வழக்கமான கோணங்கிச் சேட்டைகள் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

பாலசரவணன், ஆடுகளம் நரேன் என இன்னபிர நடிகர் நடிகைகள் தேர்வும் அவர்களின் நடிப்புப் பங்களிப்ப்பும் நேர்த்தி.

அந்த இஸ்திரிப் பெட்டி வடிவிலான லாண்டரி வாகனம் தனித்துவம். ஆர்ட் டைரக்டர் வீரசமர்!

மோசஸின் இசை, எஸ். என். வெங்கட்டின் ஒளிப்பதிவு கச்சிதம்!

சற்றே விறுவிறுப்பான கதைக்களத்தை படபடப்பான காதல், பரபரப்பான திருப்பங்கள், அச்சுப்பிச்சு காமெடி என சரிவிகித மசாலா தூவிப் பரிமாறிய விதத்தில், இயக்குநர் மணிகா வித்யா அடுத்தடுத்த படங்களை இன்னும் சிறப்பாக தருவார் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here