பொன் ஒன்று கண்டேன் சினிமா விமர்சனம்

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த பிரியா இயக்கிய திரைப்படம் இது. தமிழ்ப் புத்தாண்டு அன்று ஜியோ சினிமாவில் நேரடியாக வெளியாகியிருக்கிறது.
மென்மையான, நுட்பமான நகைச்சுவையுடன் நகரும் ‘ரொமான்டிக் காமெடி’ வகைத் திரைப்படங்களைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் சில சுவாரசியமான தருணங்களைக் கொண்டிருக்கிறது. திரைக்கதையை விவரிப்பதற்கு பல சுவாரசியமான உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
என்றாலும் ஒட்டுமொத்த நோக்கில் ஒரு சுமாரான அனுபவத்தை மட்டுமே தர முடிந்திருக்கிறது. படம் முடியும் போது ‘செமல்ல’ என்று தோன்ற வேண்டிய ஃபீல் எதுவும் ஏற்படவில்லை.
‘நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை.. நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை’ என்று சிவாஜியும் பாலாஜியும் இணைந்து பாடும் பழைய திரையிசைப் பாடல் நினைவிருக்கிறதா? யெஸ். படத்தின் தலைப்பும் அதையேதான் அடையாளமாகக் கொண்டிருக்கிறது.
பிரியாவின் முதல் திரைப்படமான ‘கண்ட நாள் முதல்’ பரவலாக கவனிக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்துவது போலவே இதிலும் ஒரு முக்கோணக் காதலின் சிக்கல்களை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார். விவாகரத்து செய்தவனும் ஒரு புதிய காதலனும் ஒரே பெண்ணுக்காக முட்டிக் கொள்வதும் விட்டுக் கொடுப்பதும் என்கிற போராட்டத்தை இயன்றவரை நகைச்சுவையாக சித்தரித்துள்ளார்.
அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லஷ்மி என்று அதிக பிரபலம் அல்லாத நடிகர்களை உபயோகப்படுத்தியிருப்பதால் அவர்கள் கதாபாத்திரங்களாகவே தோன்றுவது ஒரு பலம். மூவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
தானே தயாரிப்பாளராக இருக்கும் படம் என்னும் போது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எப்படி ரகளையாக இருந்திருக்க வேண்டும்?! ம்ஹூம். அந்த மாயம் ஏனோ நிகழவில்லை.
இது அவருக்கே தெரிந்திருந்ததோ, என்னமோ, ஓரிடத்தில் தனது தந்தை இளையராஜாவின் பாடலை உபயோகப்படுத்தியுள்ளார். ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ பாடல் ஒலிக்கும் போது சட்டென்று மனதிற்குள் ஏஸி போட்டது போல் அப்படியொரு சுகம். இளையராஜாவிற்கு என்றும் அழிவில்லை. சமகாலத் திரைப்படங்களின் காட்சிகளின் பின்னணிக்கும் அத்தனை புத்துணர்ச்சியுடன் பொருந்துகிறார்.
ஒரு காட்சியில் மணிரத்னத்தின் வாசனையை நாமே உணரும் போது கதாபாத்திரமும் “மணிரத்னம் படத்துல வர்ற காரெக்ட்டர் மாதிரி ஃபீல் பண்றேன்” என்கிறது. தனது குருநாதரை தாண்டி வருவதுதான் ஒரு படைப்பாளிக்கு பெருமை.
கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’, பாலசந்தரின் ‘அவர்கள்’ உள்ளிட்டு சில முந்தைய திரைப்படங்கள் லேசாக நினைவிற்கு வந்தாலும், பிரியா தனித்தன்மையோடு படத்தை இயக்கியுள்ளார். ஒரு மாதிரி சவசவவென்று நகர்ந்து கொண்டிருக்கும் படம், விவாகரத்து பின்னணியை அவிழ்க்கும் போது பரபரப்பாகிறது. மீண்டும் சவசவ. கிளைமாக்ஸை எப்படி அணுகுவது என்கிற தத்தளிப்பு இறுதிக் காட்சியில் தெரிகிறது.
எமோஷனல் கனெக்ட் என்பது ஒரு திரைப்படத்திற்கு முக்கியம். பாத்திரங்கள் ஃபீல் செய்வதை பார்வையாளனும் பிரதிபலித்தால் அந்தப் படம் உத்தரவாதமாக வெற்றி பெறும். அந்த நோக்கில் இதன் பல காட்சிகள் பிளாஸ்டிக்தனமாக உள்ளன.
இயக்குநர் பிரியாவால் ஒரு மிகச்சிறந்த ரொமான்டிக் காமெடி டிராமாவைத் தர முடியும் என்பதற்கான சுமாரான டிரைய்லர் போல் இருக்கிறது ‘பொன் ஒன்று கண்டேன்.’
-சுரேஷ் கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here