‘போர்’ சினிமா விமர்சனம்

இன்றைய இளைய தலைமுறையை எல்லாவிதங்களிலும் பரவசப்படுத்தும் படைப்பு. பல்கலைக் கழக மாணவர்கள் இரண்டு பேர் பகையாளிகளாகி தங்களுக்குள் மோதிக்கொள்ள, ஒட்டு மொத்த பல்கலைக் கழகமும் ‘போர்‘க்களமாகிற கதை.

பள்ளிப் படிப்பின்போது தனக்கு கசப்பான அனுபவத்தை தந்த அர்ஜுன்தாஸை, பல்கலைக் கழகப் படிப்பின்போது பழி வாங்கத் துடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் மாணவ மாணவிகளின் பேராதரவு கிடைக்க, இருவருக்குமான பகை இரு தரப்புக்கான மோதலாக வெடிக்க அடிதடி, வெட்டுக்குத்து என அடுத்தடுத்த காட்சிகள் அத்தனையும் ரணகளம். இடையில் அரசியல்வாதியொருவரும் அவருடைய மகளும் தங்கள் பங்கிற்கு அடாவடி அராஜகத்தில் ஈடுபட நிறைவில் யார் கை ஓங்கியது, யார் கை அடங்கியது என்பதே கதை… லாஜிக் அதுஇதுவென எதையும் யோசிக்காமல் வேகமெடுக்கிறது திரைக்கதை…

அர்ஜூன்தாஸ் முந்தைய சில படங்களில் அரங்கேற்றிய அடாவடித்தனத்தை, ரவுடியிஸத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். வசனங்களும் அதே கரகர குரலில் டெலிவரியாகியிருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம் படம் நெடுக பழிவாங்கும் உணர்வுடன் தெனாவட்டு காட்டித் திரிகிறார். அந்த தெனாவட்டு ஒரு அளவுக்கு மேல் இயல்பைத் தொலைத்திருக்கிறது.

இருவருக்கும் ஆளுக்கொரு காதலி. அவர்களுடன் சரசம் சல்லாபம், சண்டை சச்சரவு எனவும் காட்சிகள் நீள்கின்றன.

சதைப் பிடிப்பில்லாத சஞ்சனா, அம்ருதா இருவரும் கதையைப் பிடித்துக் கொண்டு பயணித்ததில் குறையில்லை. படத்தில் கதாநாயகர்களுக்கு, கதாநாயகிகளுக்கு சிநேகிதிகளாக வருகிறவர்கள் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் பரிதாப தோற்றத்திலிருந்தாலும் அவர்களின் நடிப்புப் பங்களிப்பில் உயிரோட்டம் நிறைந்திருக்கிறது.

அரசியல்வாதியின் மகளாக வருபவர் தேவைக்கேற்ப கெத்து காட்டியிருக்கிறார்.

கல்லூரிப் பருவ மாணவ மாணவிகளை சுற்றிச் சுழலும் கதையென்பதால் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகம். ஜான் விஜய் உள்ளிட்ட இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.

காட்சிகள் தொய்வடையும் போதெல்லாம் சுறுசுறுப்பூட்ட ஒரு பெரிய குழுவே பின்னணி இசையில் உழைப்பைக் கொட்டிக் குவித்திருக்கிறது. அதே குழு, கிளைமாக்ஸில் இரு ஹீரோக்களும் ஒட்டு மொத்த மாணவ மாணவிகளும் படு உக்கிரமாக அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, ரத்தமும் சதையுமான அந்த தருணங்களை உற்சாகமான இசைக் கச்சேரி ரேஞ்சுக்கு மாற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவின் தரத்தை தனியாக பாராட்டலாம்.

இளையதலைமுறை சினிமா ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் விதமாக மாணவ மாணவிகளின் ஈகோ மோதல், அவர்களின் நல்லது கெட்டது பற்றி யோசிக்காத பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடற்ற சுதந்திரம், அனுபவிக்கும் போதை, முத்தப் பரிமாற்றம், ஓரினச் சேர்க்கை, சாதி ஏற்றத்தாழ்வு என பலவற்றையும் கலந்துகட்டியிருக்கிற இயக்குநர் பிஜாய் நம்பியார் நிச்சயமாய் சாமர்த்தியசாலிதான்; மறுப்பதற்கில்லை. நல்ல சினிமா எடுக்க இந்த சாமர்த்தியம் மட்டுமே போதாது.

போர் – மேக்கிங்கில் மட்டுமே ஜோர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here