‘ராட்சசன் 2′ பார்க்க வந்திருக்கிறோம் போலிருக்கிறது என்ற உணர்வைத் தருகிற கதை, திரைக்கதை பின்னலில் ‘போர் தொழில்.’
நகரத்தில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கொலைகள் நடக்கிறது. அவற்றை அரங்கேற்றுவது யார் என்று கண்டுபிடிக்க அனுபவமிக்க காவல்துறை அதிகாரியான சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக அப்போதுதான் பணியில் சேர்ந்த அசோக்செல்வனை கோர்த்து விடுகிறார்கள்.
இருவரும் களமிறங்கி துப்பறிந்ததில் கொலைகளைச் செய்வது ஏதோவொரு ‘சைக்கோ’ என்பது பிடிபடுகிறது. சாதுர்யமாக காய் நகர்த்தியதில் அந்த சைக்கோவும் பிடிபடுகிறான்.
அவனை விசாரிக்க விசாரிக்க அவன் சைக்கோவானது ஏன், கொலை செய்யப்பட்டவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தான் என்பதெல்லாம் பெட்ரோல் கிணற்றில் தீ பற்றியது போன்ற பரபரப்புடன் பதறவைக்கும் காட்சிகளாக விரிகிறது… கிளைமாக்ஸ் வழக்கம்போல்.
சரத்குமாரை ஏகப்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக பார்த்திருந்தாலும், பார்வையில் கடுகடுப்பு பேச்சில் சிடுசிடுப்பு என சற்றே நடிப்பில் வித்தியாசம் காட்டும்படி உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் காட்டியிருக்கும் கெத்து கச்சிதம்!
தன்னையும், புத்தகங்கள் படித்துப் படித்து சேகரித்த தன் அறிவையும் மதிக்காத உயரதிகாரியுடன் துப்பறிய களமிறங்கி, மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னர் தன்னை அவர் மதிக்கும்படி உயர்கிற, துணிச்சலற்ற போலீஸாக களமாடி சரியான சந்தர்ப்பத்தில் துப்பாக்கியோடு சீற்றம் காட்டுகிற வித்தியாசமான பாத்திரத்தில் அசோக் செல்வன். பாத்திரத்தின் தன்மையும் கனமும் உணர்ந்த அவரது நடிப்பு அப்ளாஸ் அள்ளுகிறது.
சமீபத்தில் காலமான சரத்பாபுவுக்கு சொல்லிக் கொல்லும்படியான காதாபாத்திரம். தேர்ந்த நடிப்பும் திருதிரு பார்வையும் அவரது பாத்திரத்துக்கு ‘ராட்சச’ பலம் சேர்த்திருக்கிறது.
மனைவியின் நடத்தையால் வெகுண்டெழுந்து சைக்கோவாகிற அந்த குண்டு ஆசாமியும் மிரட்டுகிறார்.
ஒப்புக்கு சப்பாணி போல வந்தாலும் நிகிலா விமலின் கன்னக்குழி அழகை கதையோடு இழுத்துக் கட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
கொஞ்ச நேரமே வந்தாலும் பி எல் தேனப்பனின் நடிப்பு தனித்து தெரிகிறது.
சைக்கோ, சைக்கோவானதற்கு சொல்லப்படும் காரணம் ஓரளவு ஏற்கும்படியிருந்தாலும் அவன் கொலை செய்வதற்கான காரணத்தில் நியாயமில்லை. சைக்கோ என்றானபின் அவனிடம் நியாய தர்மம் பாவ புண்ணியத்தையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்ற வகையில் பொறுத்துக் கொள்ளலாம்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை வேகமெடுத்து ஓடும் காட்சிகளை வெறித்தனமாய் துரத்தியிருக்கிறது.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அத்தனை நேர்த்தி.
ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கத்திரி செம ஷார்ப்.
அது எப்படி சாத்தியம், இது எப்படி நடக்கும் என ஒருசில கேள்விகள் மனதுக்குள் எட்டிப் பார்த்தாலும் அதையெல்லாம் கட்டிப்போடும்படி திரைக்கதையில் வித்தை காட்டியிருக்கிற இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு பெரிதாய் ஒரு பாராட்டுப் பூங்கொத்து!