கதையாழத்தால் கொண்டாடப்படுகிற மலையாளத் திரையுலகிலிருந்து, காதலும் காமெடியும் கலந்துகட்டிய புதுவரவாய் ‘பிரேமலு.’
ஐடி துறையில் பணிபுரியும் அந்த இளம்பெண் மனதில் பல லட்சியங்கள். அதில் தனக்கு வரப்போகிற கணவன் பொருளாதாரத்தில் வலுவானவனாக, அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. அவள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா இல்லையா என்பதே கதையோட்டம். இயக்கம் கிரிஷ் எ டி
நாயகன் நஸ்லின் கபூர் லட்சணமாக இருக்கிறார். சொத்துபத்து இல்லாததால் வெளிநாடு போகும் கனவு தகர்ந்த வேதனையை பிரதிபலிப்பதாகட்டும், ஹைதராபாத்தில் கோர்ஸ் ஒன்றில் ஆர்வமாக சேர்வதாகட்டும், நாயகியிடம் தன் காதலை ஆதிகாலத்து ஸ்டைலில் சொல்வதாகட்டும், குடிபோதையில் வில்லனை கலாய்ப்பதாகட்டும், ஹீரோயினை தொடர்ச்சியாய் சிரிக்க வைப்பதாகட்டும் நடிப்பில் சிக்ஸர் விளாசுகிறார். கதாபாத்திரப் பெயர் ‘சச்சின்.’
பக்கத்து வீட்டுப் பெண் போலிருக்கிற கதாநாயகிகளின் வரிசையில் மமிதா பைஜூ. ‘சூப்பர் சரண்யா’ என்ற படத்தில் ஒல்லிப் பிச்சானாக வலம் வந்தவர், கதைப்பற்றுள்ள இந்த படத்தில் சதைப்பற்று கூடியிருக்கிறார். ஐ.டி. பணியாளர் கதாபாத்திரத்தில் மிகச்சரியாய் பொருந்தியிருக்கிறார். மேடத்தின் பளீர் சிரிப்பும், அளவான அழகான நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
ஆதி என்ற பெயரில் காமெடி வில்லனாக வருகிற ஷ்யாம் மோகனின் ‘ஜஸ்ட் கிடிங்’ அலப்பரை லகலக. கிளைமாக்ஸில் அவரிடமிருந்து கிடைத்திருக்கிறது துடிப்பான நடிப்பு.
மீனாட்சி ரவீந்திரன் பார்ட்டியில் பாடுகிற காட்சியில் தாறுமாறாய் கலகலப்பூட்ட, அகிலா பார்கவன் கதையில் கச்சிதமாக கலந்திருக்கிறார்.
நாயகனின் நண்பனாக படம் நெடுக வருகிற சங்கீத் பிரதீப், சமீர்கான், மேத்யூ தாமஸ் என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நேர்த்தி.
கிரண் ஜோஷி, கிரீஷ் இருவரின் திரைக்கதையில் முதல் பாதியின் முதல் 1/2 மணி நேரம் கொஞ்சம் தொய்வாக நகர்ந்தாலும், பின் பாதியின் நீளம் சற்றே அதிகமாக இருந்தாலும், நிறைவுக் காட்சி மனதை நிறைக்கிறது.
உயிரோட்டமும் உணர்வுகளின் போராட்டமுமாய் கடந்தோடும் காட்சிகளை அதன் தன்மை மாறாமல் தாங்கிப் பிடித்திருக்கிறது விஷ்ணு விஜயனின் பின்னணி இசை. பாடல்கள் இரண்டும் இதம் தருகிறது.
ஒளிப்பதிவின் கோணங்களுக்கும் தரத்துக்கும் தனி பாராட்டு.
பிரேமலு – காதலர்கள் சால இஷ்டம்னு சொல்லப் போறது கன்பார்ம்லு!