தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு; இந்த படம் பார்த்து, ஒரேயொரு பையன் திருந்தினாகூட படம் மாபெரும் வெற்றி! -ராமம் ராகவம் பட விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேச்சு

அறிமுக இயக்குநர் தன்ராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடித்துள்ள படம் ‘ராமம் ராகவம்.’

இந்த படம் வரும் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், முன்வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் தன்ராஜ், “சமுத்திரகனி அண்ணன் என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு நன்றி. அவர் அப்பாவாக 21 படங்கள் னி நடித்திருக்கிறாராம். படத்தின் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி, “தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல, கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில் கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான்.

கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா’ என்றேன். ‘நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.

நிகழ்வில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here