வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடிக்க, அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கியுள்ள படம் ‘ரணம்.’
மது நாகராஜ் தயாரித்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ஷெரீஃப் பேசியபோது, ”ஒரு குறிப்பிட்ட செய்தி கண்ணில்பட்டது. அது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த கதையை தேர்வு செய்தோம். கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்தப் பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்து முடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும்.
அந்த அறம் தர்மம் என்பது தானம் மட்டுமல்ல; உண்மைக்காக குரல் கொடுப்பது; அநியாயத்தை எதிர்ப்பது. இது எல்லாமே தர்மம் மற்றும் அறம் தான். அதை நாம் யோசிக்காமல் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
படத்தின் நாயகன் வைபவ் பேசியபோது, ”ஷெரிஃப் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்போது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் வருவார்.
இந்த படத்தில் சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று சொன்னார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்” என்றார்.
படத்தை வெளியிடுகிற சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியபோது, ”நாயகன் வைபவ் நடித்துள்ள 25-வது படம் இது. அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப்” என்றார்.
தயாரிப்பாளர் மது நாகராஜ், நடிகை தான்யா ஹோப், நடிகை சரஸ் மேனன், இசையமைப்பாளர் அரோல் கரோலி, கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா உள்ளிட்டோரும் பேசினார்கள்.