‘ருத்ரன்’ பட வெற்றிக் கொண்டாட்டம்! பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு இயக்குநர் கதிரேசன் நலத்திட்ட உதவி!

ராகவா லாரன்ஸ் நடிக்க, முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்த படம் ‘ருத்ரன்.’

‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் – சரத்குமார் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளரும் இயக்குநருமான ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கதாசிரியர் திருமாறன், நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடி உணவும், நன்கொடையும், அத்தியாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன், “ருத்ரன் திரைப்படத்திற்கு தங்களது மேலான ஆதரவை அளித்த ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான். எனவே பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை கொண்டாடியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது” என்றார்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here