‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா. இளமை ததும்பும் முகம், கவர்ச்சியான காந்தக் கண்கள், வசீகரிக்கும் புன்னகை, ஏற்கும் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பு என திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவர், ‘மேதகு 2’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராகவும் தன் எல்லையை விரிவுபடுத்தியவர். சின்னத்திரை, வண்ணத்திரை, டிஜிட்டல் திரை என எந்த திரை வடிவமாக இருந்தாலும் தன் கடின உழைப்பை வழங்கி, ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்து, அவர்களிடத்தில் ‘சின்ன சிவகார்த்திகேயன்’ என்ற பட்டத்தை வென்றிருக்கிறார். ‘ஈடாட்டம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரைச் சந்தித்து உரையாடினோம்.
தினமும் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் மாற்றம் பெற்று வரும் திரைப்படத்தில், முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து?
முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பங்களிப்பும், பொறுப்பும் கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகி இருக்கிறது. தற்போது நான் ஒரு வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்றால், அதுவும் குடும்பத்துடன் ஈடுபட்டிருக்கிறேன் என்றால்.. அதனால் ஏற்படும் லாப நஷ்டம் என் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்கும். ஆனால் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் சினிமா என்பது நூறு குடும்பங்களை கூட்டு உழைப்பு என்பதை கடந்து, ஆயிரம் குடும்பங்களின் கூட்டு முயற்சியாக விரிவடைந்து இருக்கிறது. இதனால் முன்னணி வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.
சினிமாவில் அறிமுகமாவதும், அதில் தொடர்ந்து பணியாற்றுவதும் பெரிய சவால்தான். திரைத்துறையில் இருக்கும் அரசியலை எதிர்கொண்டு இங்கு முன்னேறுவது அதைவிட பெரிய சவால் தான். தற்போதைய சூழலில் திரைத்துறையில் பணியாற்றும் நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தங்களது வாரிசுகளை எளிதாக அறிமுகப்படுத்த இயலும்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் எந்த திரைத்துறை பின்புலமும் இல்லாமல், கடினமாக உழைத்து, இன்று திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரன நாயகர்களாக வலம் வருகிறார்கள்.
சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்தது எது நடிப்பா? நாட்டியமா? சண்டைக் காட்சிகளா?
அனைத்தும் பிடிக்கும். இருப்பினும் நடனத்தின் மீது தனி ஈர்ப்பு உண்டு. நான் சிறிய வயதில் மேடை நாடகத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறேன். என் ஆரோக்கியமும் இதில் இருப்பதால் நடனத்தை மிகவும் நேசிக்கிறேன்.
உங்களது வெற்றியின் சூத்திரம் என்ன?
பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான ரகசிய சூத்திரம். எந்த குழந்தையும் பிறந்தவுடன் நடப்பதில்லை. அதற்கான காலம் வரும்போது தான் நடக்கத் தொடங்குகிறது.
நம்முடைய எண்ணங்கள்தான் வாழ்க்கை என்பதால், நல்ல எண்ணங்கள் தான் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அடித்தளம்.
வளர்ச்சி என்பது இயல்பாகவும், மெதுவாகவும் தான் இருக்க வேண்டும். அதுதான் நிலையானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை மரணத்தை தழுவுவதற்கு முன்பு கூட ஒரு முறை வெற்றி பெற்றால் போதும். அந்த வெற்றி நம் சரித்திரத்தை அடுத்து வரும் தலைமுறைக்கு அடையாளமாக இருக்கும்.
உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன?
இலக்கு என்று எதையும் பெரிதாக நிர்ணயித்துக் கொள்வதில்லை. என்னுடைய தலைமுறையில் இருப்பவர்களையும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் சினிமாவின் மட்டும் தான் நல்ல கருத்துகளையும், நல்ல விசயங்களை தொடர்ந்து சொல்ல முடியும். அரசியல் – சினிமாவை விட பெரிய கடல் என்பதால், அதனைத் தவிர்த்து விட்டு, சினிமாவிற்குள்… சினிமா மூலமாக தொடர்ந்து மக்களுக்கு தேவையான விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் மட்டும்தான் நாம் இறந்த பிறகும், நாம் திரையில் சொல்லிய கருத்துக்கள் குறித்த விவாதங்கள் மக்களிடத்தில் இருக்கும்.
ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தோம். சம்பாதித்தோம். திருமணம் செய்து கொண்டோம். குழந்தையை பெற்றுக் கொண்டோம். வீடு கட்டினோம். இறந்து விட்டோம்… என்று இருப்பதைவிட, மக்களின் மனதில் எப்போதும் வாழ வேண்டும். நமக்கான அடையாளங்கள் காலம் கடந்தும் பேசப்பட வேண்டும்.
சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் விருப்பம் உண்டா?
நான் இதுவரை சின்னத்திரைகளிலும், பெரிய திரையிலும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் ‘பொன்னியின் செல்வன்’, ‘யாத்திசை’ போன்ற சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக் கொள்வேன்.
நடிகைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் மறக்க இயலாத அனுபவம் குறித்து..
படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் கசப்பான எந்த அனுபவமும் இதுவரை ஏற்பட்டதில்லை. சின்னத்திரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும்++ படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இயல்பாக பழகுபவன். அனைவரிடத்திலும் பிரத்யேக திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். அதனால் படபிடிப்பு தளத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன்.
ஈடாட்டம் குறித்து?
இன்றைய சூழலில் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படம். இதில் விக்கி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குடிப்பழக்கம் -நட்பு- காதல்.. என இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களை திரையில் பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் என்னுடைய விக்கி கதாபாத்திரத்தை விட, திரைப்படம் சொல்ல வரும் விசயத்தை ரசிப்பார்கள். புரிந்து கொள்வார்கள். தங்களது தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
இயக்குநர் ஈசன் நேர்த்தியாக ‘ஈடாட்டம்’ படைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு என்னுடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.