சினிமாவில், மாடலிங் துறையில் பெண்கள் சந்திக்கிற பாலியல் தொல்லைகள் பற்றி ஊருக்கே தெரியும்; உலகத்துக்கே புரியும். சற்றே தள்ளி நின்று மாடலிங் துறையில் ஈடுபடும் ஆண்கள் சந்திக்கிற சவால்களை, சிக்கல்களை அலசும் முயற்சியாக, பரபரப்பான கிரைம் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் படைப்பாக ‘இராக்கதன்.’
மாடலிங் துறையில் பிரபலமாக விரும்புகிற அந்த இளைஞன் போட்டோ ஷூட் அது இதுவென நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். அவனது போக்கு பிடிக்காததால் அம்மாவின் வெறுப்பை சம்பாதிக்கிறான். தங்கையின் திருமணத்துக்கு பணம் தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் யோசித்து, மாடலிங் ஆசையை ஓரமாக வைத்துவிட்டு சேல்ஸ் ரெப் வேலையில் சேர்கிறான். வேலையில் அவனால் பொருந்திப் போகமுடியவில்லை. அந்த நேரமாகப் பார்த்து மாடலிங் உலகில் நுழைய வாய்ப்பு தேடி வருகிறது. பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான்; அதற்கு தன்னையே விலையாக கொடுக்க வேண்டிய கட்டாயம். பணம் கிடைப்பதால் உடன்படுகிறான். அதன் விளைவுகள் என்ன என்பதே மீதிக் கதை. இயக்கம்: தினேஷ் கலைச்செல்வன்
அழகான முகவெட்டு, கவர்ச்சியான உடற்கட்டு என மாடலுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற விக்னேஷ் பாஸ்கர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.
காவல்துறை உயரதிகாரியாக வம்சி கிருஷ்ணா. அடர் மீசை, புதர் தாடி என போலீஸ் வேடத்துக்கு பொருந்தாத தோற்றத்தில் வந்தாலும் நடந்த கொலை, அதன் பின்னணியைத் தோண்டித் துருவி குற்றவாளியை நெருங்கும் சாமர்த்தியம் என துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
பணம் கொழுத்த பெண்களின் அந்தரங்க ஆசைக்கு ஆண்களைப் பலியாக்கும் வேடத்தில் ரியாஸ் கான். உடலளவில் பெண்மையின் பிரதிபலிப்பு, பேச்சில் மிரட்டல் என தன் பங்களிப்பை மிகச் சரியாக செய்திருக்கிறார்.
கட்டுமஸ்தான ஆண்களை தன் காமப்பசிக்கு இரையாக்குபவராக சஞ்சனா சிங். அந்த வாட்டசாட்டமான உடல்வாகும், கிளுகிளுப்புக் காட்சிகளுக்காக தராளமாய் காட்டியிருக்கும் கவர்ச்சியும் அவர் ஏற்றிருக்கும் வில்லங்கமான வேடத்தின் தேவையை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது.
நாயகனின் காதலியாக காயத்ரி ரீமா. பெரிதாய் வேலையில்லை என்றாலும் வருகிற ஒருசில காட்சிகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது நேர்த்தியான நடிப்பு!
நாயகனின் நண்பனாக இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன். நட்புக்கு துணை நின்று அநியாயமான முடிவுக்கு ஆளாகி கலங்கச் செய்கிறார்.
நிழல்கள் ரவி, சாம்ஸ் என இன்னபிற நடிகர்களின் நடிப்பும் நிறைவு!
மானஸ் பாபுவின் ஒளிப்பதிவு, பிரவீன் குமாரின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன!
குறைகள் இருந்தாலும், மாடலிங் துறையில் நடக்கும் ஆண் விபச்சாரத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கும் இயக்குநரின் துணிச்சலை பாராட்டாமல் விட முடியாது!