‘இராவண கோட்டம்’ சினிமா விமர்சனம்
கதையும் கதைக்களமும் சரிவர பொருந்திப்போகிற மிகச்சில படங்களின் வரிசையில் இன்னொன்று…
ஆண்டாண்டு காலமாக மழையால் வஞ்சிக்கப்பட்டு வறட்சியின் பிடியிலிருக்கிற இராமநாதபுரம். அந்த மாவட்டத்தின் ஒரு கிராமம் மேலத் தெரு, கீழத் தெரு என இரண்டாக பிரிந்திருக்கிறது. பெயரளவில் அப்படி பிரிந்திருந்தாலும் அந்த இரண்டு பகுதிகளின் ஊர்ப் பெரியவர்கள் மனதளவிலும் பெரியவர்களாக இருப்பதால், அவர்களின் நட்பில் ஆழமிருப்பதால் ஊர் ஒற்றுமையாக இருக்கிறது.
அந்த ஊரின் கனிம வளத்தை சூறையாடுவதற்கு குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனம், அமைச்சரை விலைக்கு வாங்குகிறது. அவர் அந்த கிராமத்தின் எம்.எல்.ஏ.வை தனக்கு அடிமையாக்கிக் கொள்கிறார். பணமும் அதிகாரமும் இருந்தால் எதையும் செய்யலாம்தானே? அதன்படி ஊரின் ஒற்றுமையை சிதைக்க திட்டமிடுகிறார்கள். திட்டத்தை செயல்படுத்தவும் செய்கிறார்கள். அதன் முடிவு என்னவானது என்பதே மிச்சமீதி கதை, திரைக்கதை…
கருவேல மரங்களால் நமது மண்ணுக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை, இனியும் அது தொடரும் என்ற வேதனையான உண்மையை, அதன் பின்னணியிலுள்ள சூழ்ச்சி அரசியலை அதன் தன்மை மாறாமல் பதிவு செய்திருப்பது இராவண கோட்டத்தின் தனித்துவம். இயக்கம்: விக்ரம் சுகுமாரன்
காடுபோல் தாடி, கம்பீரமாய் மீசை, அகன்று விரிந்த தோள்கள், வேகப் பாய்ச்சலெடுக்கும் கால்கள், கோபத்தில் கண்களில் நெருப்பு, காதல் பார்வையில் ஒருவித மிதப்பு என கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் ஷாந்தனு. ஊர்ப் பெரியவரின் பக்கபலமாக நிற்பது, உற்ற நண்பனே துரோகியாகும்போது மனம் கலங்குவது, ஊரின் நலனுக்காக நண்பனை எதிர்ப்பது, எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டறிந்து தகர்ப்பது என வெறியேறிய காளையாக நடிப்புப் பங்களிப்பில் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்!
ஷாந்தனுவுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி. நடிப்புக்கு பெரிதாய் வேலையில்லை என்றாலும் அந்த வழக்கமான கள்ளமில்லா சிரிப்பும், காதலனிடம் முத்தம் கேட்கும் குறும்பும் அத்தனை அழகு!
தன் ஒற்றைச் சொல்லுக்கு கிராமமே கட்டுப்படுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கைச் சம்பாதித்தவராக பிரபு. கனமான அந்த பாத்திரத்துக்கான பங்களிப்பில் பெரும்பகுதியை அவரது பரந்துவிரிந்த உடற்கட்டே வழங்கிவிட முதிர்ந்த நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார் ‘இளையதிலகம்.’
கிட்டத்தட்ட பிரபுவுக்கு சமமான கதாபாத்திரத்தில் இளவரசு. இயல்பான நடிப்பால் அவரது பாத்திரத்துக்கு தெம்பூட்டியிருக்கிறார்.
இளவரசின் வாரிசாக வருகிற இளைஞரின் திரண்டு செழித்த உடற்கட்டு அசரடிக்கிறது. சொந்தமூளையைத் தூக்கி மூலையில் வீசிவிட்டு சூழ்ச்சியாளர்களின் சதி வலையில் சிக்கிச் சின்னாபின்னமாகிற அந்த கதாபாத்திரத்திற்கு உரிய திறன் காட்டியிருக்கிறார்!
ஊரின் ஓற்றுமையைக் குலைக்க காய் நகர்த்தும் அந்த ஒற்றைக் கை ஒடிசல் ஆசாமியின் ‘சகுனி’த்தனம் தனித்து தெரிகிறது.
மாவட்ட ஆட்சியராக ஷாஜி, எம்.எல்.ஏ.வாக அருள்தாஸ், அமைச்சராக பிஎல். தேனப்பன், நாயகனின் சகோதரியாக தீபா ஷங்கர் உள்ளிட்டோரின் நடிப்பும் நேர்த்தி!
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையில் கதையோட்டத்துக்குத் தேவையான உயிரோட்டம் இருக்கிறது. அந்த ஒப்பாரிப் பாட்டும் கவனம் ஈர்க்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் வறட்சி, முரணாய் பார்வைக்கு எட்டிய தூரம் வரை செழிப்பாய் வளர்ந்து படர்ந்த கருவேல மரங்கள் என விரிகிற இராமநாதபுரத்தின் நீள அகலத்தை தனது கேமரா கண்களால் வளைத்துச் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்.
நான்கைந்து குடங்கள் பொருந்துகிற அளவிலான டிராலி போன்ற கைவண்டியை மனிதர்கள் அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு திரிவதை அவ்வப்போது காண்பித்து அந்த மாவட்டத்தின் வறட்சியை, தண்ணீர் பற்றாக்குறையை பதிவு செய்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்!
மக்களின் நலன் சார்ந்துதான் என்றாலும் இடம் பொருள் ஏவல் என எதையும் யோசிக்காமல் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கலெக்டர் ஒருவர் கருத்து தெரிவிப்பது, பிணங்களை எரிப்பதில் பிளவு ஏற்படும் காட்சியில் ஒரு சில நிமிடங்களில் நாயகனின் நிலைப்பாடு தலைகீழாய் மாறுவது… இப்படி இன்னும் சில ஏனோதானோ காட்சிகளின் அணிவகுப்பும் படத்தில் உண்டு. கிளைமாக்ஸ் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்!
நாட்டின் வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் சதிகளை பல படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தாலும், சற்றே தள்ளிநின்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் நீண்ட நெடிய ஆபத்தை கழுகுப் பார்வையில் காட்சித் தொகுப்பாக்கியிருக்கும் இராவண கோட்டம் – காட்டம்!