கீர்த்தி சுரேஷ் ‘கியூட்’டாக நடித்திருக்கிற படம்.
பெண்களின் திருமண வயது 15 என்ற சட்டவிதி நடைமுறையில் இருந்த, 1960 காலகட்டத்தில் நடக்கிற கதை.
கயல்விழி நன்றாகப் படித்தவள்; ஹிந்தி திணிப்பை எதிர்த்து தான் வசிக்கும் ஊரில் புரட்சி செய்தவள்; வங்கிப் பணியில் இருப்பவள்; ஆண் பெயரில் கதைகள் எழுதி பிரபலமாகி வருபவர். பெண்ணுரிமை அது இதுவென சிந்திக்கிற, சிந்திக்கிறபடி துணிச்சலாக செயல்படுகிறவள்.
பெண்ணுரிமை பேசுகிற, புரட்சிகர செயல்பாடுகளில் ஈடுபடுகிற பெரும்பாலான பெண்களுக்கு பெண்களுக்கு திருமணத்தின் மீது விருப்பம் இருக்காது. கயலின் மனநிலையும் அப்படியே இருக்கிறது.
ஒரு கட்டத்தில் அவள் தன் வீட்டாரை திருப்திபடுத்துவதற்காக கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறாள். அவள் பார்வையில் முற்போக்குவாதியாக தெரிகிற ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிகிறது. அதன் பின்னர், அவளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை முற்போக்குவாதி அல்ல என்பதும், அவன் ஆணாதிக்கத்தில் ஊறிப் போனவன் என்பதும் அவனது தவறான குணங்களும் தெரியவருகிறது. அவனை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும் என்பதை உணர்கிறாள்.
அந்த நரகத்தில் சிக்காமல் தப்பிக்க நினைக்கும் அவள் புத்திசாலித்தனமாக சில விஷயங்களில் ஈடுபடுகிறாள். அதன் விளைவுகளே திரைக்கதையின் தொடர்ச்சி…
வெகுளித்தனமாக நடந்துகொண்டே, நினைத்த விஷயங்களை அலட்டலின்றி செய்து முடிக்கிற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் வெளிப்படுத்துகிற தைரியம், திருமண விஷயத்தில் கட்டாயப்படுத்தும் பெற்றோர் மீது கோபப் பாய்ச்சல், தனக்கு நிச்சயமான மாப்பிள்ளையின் சுயரூபம் அறிந்து புறக்கணிக்கும் விதம், மாப்பிள்ளையிடம் ‘என் விருப்பப்படி செயல்படுவதை உன்னிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என சீற்றம் காட்டும் தருணம், தாலி கட்டும் தருணத்தில் எடுக்கிற முடிவு என அத்தனையிலும் எக்கச்சக்க எனர்ஜியுடன் சுற்றிச் சுழன்றிருக்கிறார். சில காட்சிகளில் கியூட்டான நடிப்பால் மனம் விட்டு சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
கதை நாயகியிடம் அடக்க ஒடுக்கமாகப் பேசி, அவளது உணர்வுகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கும்படி நடந்து கொள்ளும்போதே ரவீந்திர விஜய் மீது, ‘இந்தாளை பார்த்தா அவ்ளோ நல்லவனா தெரியலையே? என லேசாக சந்தேகம் தொற்றுகிறது. அந்த சந்தேகத்தை உறுதிபடுத்துகிற விதத்தில் அமைக்கப்பட்ட பாத்திரத்தில் வில்லங்கமான நடவடிக்கைகள், விஷம் தடவிய புன்னகை என அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் மெல்லிய வில்லத்தனத்திற்கு மதிப்பெண்கள் கொடுப்பதில் வள்ளலாக மாறலாம்.
பாசமான தாத்தா, கேன்சர் பேஷண்ட் என அப்படியும் இப்படியுமான நெகிழ்ச்சியான கேரக்டருக்கு வழக்கம்போல் வளமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
கயலுடன் இணைந்து ஹிந்தி கற்றுக் கொள்வது, மாப்பிள்ளையைக் கடத்துதல் என கடந்தோடும் காட்சிகளில் தேவதர்ஷினி தன் பாணியிலான அச்சுப் பிச்சு சேட்டைகளால் கிச்சுக்கிச்சு மூட்ட,
வட இந்தியராக, வங்கி மேனேஜராக வருகிற ராஜீவ் ரவீந்திரநாதன், தமிழ் பேசத் தெரியாமல் பெருமையை பொறாமை, சந்தோஷத்தை சங்கோஜம், புஷ்பத்தை புஷ்பா என்றெல்லாம் உளறிக் கொண்டிருப்பது வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது.
கதாநாயகியின் அப்பாவாக ஜெயகுமார், அம்மாவாக ஆதிரா பாண்டிலெஷ்மி, அண்ணனாக ராஜேஷ் பாலச்சந்திரன், அண்ணியாக இஸ்மத் பானு, கீர்த்தி சுரேஷ் வாழும் ஊரில் ஹிந்தி மொழிக்கான மையத்தை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என பிடிவாதமாக இருப்பவர் என இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கதையின் தேவையை சரியாக நிறைவு செய்திருக்கிறது.
ஷான் ரோல்டன் இசையில், மனதில் நிற்பது சிரமம் என்றாலும் ‘எதிரலை ஓங்கட்டும் எழுந்து நின்று போரிடு’, ‘அருகே வா கண்மணியே’ பாடல்களில் உற்சாகம் அதிகம். பின்னணி இசையில் கவன ஈர்ப்பு அம்சங்கள் பெரிதாய் எதுவும் தென்படவில்லை.
ஆணாதிக்க சமூகத்தில் சுதந்திரமாக சிறகடிக்க விரும்பும் ஒரு பெண் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிற,
பீரியட் படம் என்பதை சாலைகள், தெருக்கள், வாகனங்கள், வீடுகள், அலுவலகம் என எல்லாவற்றிலும் கச்சிதமாக கொண்டு வந்திருக்கிற அறிமுக இயக்குநர் சுமன்குமார்,
கதை நடக்கும் காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தது யார் என்பதையெல்லாம் காண்பிக்காமல், அப்போதைய அரசியல் சர்ச்சைகள் எதையும் தொடாமல் சாமர்த்தியமாய் கடந்திருக்கிறார்.
உருவாக்கத்தில் சில குறைகள் எட்டிப் பார்த்தாலும் ‘ஹிந்தியை மட்டுமல்ல, எந்த விஷயத்தையும் எவர் மீதும் திணிப்பது தவறு’ என்பதை அழுத்தந்திருத்தமாய் எடுத்துச் சொல்லியிருப்பதை தாராளமாய் பாராட்டலாம்.
ரகு தாத்தா – கனமான கருத்தோடு கலகலப்பூட்டுகிற தாதா!