கடமையை சரியாகச் செய்கிற காவல்துறை அதிகாரி ரவுடிகளை, தாதாக்களை பதம்பார்க்கப் பாய்கிற அதே பழகிப் போன கதைக்களத்தில் மற்றுமொரு படம். சிவராஜ்குமார் நடித்த ‘தகரு’ கன்னடப் படத்தின் ரீமேக்.
பெண்களை ரகசிய கேமராக்களால் நிர்வாணமாக வீடியோ எடுப்பதை, பெண்களை காதலிப்பதாக நம்ப வைத்து அந்த விஷயத்துக்கு சம்மதிக்க வைத்து அந்த தருணங்களை வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல். அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த கும்பலில் இருப்பவர்கள் காபி, டீ சாப்பிடுவதுபோல் மிக சாதாரணமாக கொலைகளையும் செய்கிறார்கள். அவர்களை களையெடுக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான கதாநாயகன் களமிறங்குகிறார். இப்படியான கதைகளில் அடுத்தடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்பது தெரிந்த கதை, இந்த படத்திலும் அதே கதை… இயக்கம் கார்த்தி
நேர்மையான, துணிச்சலான காவல்துறை உயரதிகாரியாக விரைப்பான நடையோடும், முறைப்பான பார்வையோடும் விக்ரம் பிரபு. குற்றவாளிகளை வளைத்துப் பிடித்து விதவிதமாக தண்டித்து ரசிக்கிற காட்சிகளில் கெத்து காட்டியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் வேகம் கூட்டியிருக்கிறார்.
வெகுநாள் கழித்து ஸ்ரீதிவ்யாவை பார்க்க முடிகிறது. படத்தின் பின் பாதியில் வந்து ஒருசில காட்சிகளில் மென்புன்னகையோடு ஹீரோவை காதலிக்கிறார், அவரோடு டூயட் பாடலில் அசைந்தாடுகிறார். மற்றபடி மேடத்தின் பெர்ஃபாமென்ஸில் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.
ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக வருகிற அனந்திகாவின் இளமையும் துறுதுறுப்பும் மனம் கவர்கிறது.
மூன்று கொலைகளைச் செய்துவிட்டு 300 கொலைகள் செய்த அளவுக்கு பில்டப் கொடுக்கிற இயக்குநர் வேலு பிரபாகரன் பெரிதாக ஏதையாவது செய்வார் என்று பார்த்தால் உம்ஹூம்…
அவரிடம் தொழில் பழகி பெரிய பெரிய குற்றங்களை பொழுதுபோக்காக செய்கிற ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா, டேனியல் ஆனிபோப் மூவரும் அவர்களால் முடிந்த வில்லத்தனத்தை நல்லபடியாக செய்திருக்கிறார்கள்!
செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் என இன்னபிற நடிகர்கள் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
தேர்ந்த நடிகர் ஹரீஷ் பேராடியை வீணடித்திருக்கிறார்கள்.
‘என் கன்(Gun)லேருந்தும் தப்பிக்க முடியாது, கண்லேருந்தும் தப்பிக்க முடியாது’ என கவிதைத்தனமாக வந்துவிழும் இயக்குநர் முத்தையாவின் வசனங்களை சில இடங்களில் ரசிக்க முடிகிறது.
ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையால் சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் சாம் சிஎஸ். மனதை வருட ‘அழகு செல்லம் அம்முக்குட்டி’, உற்சாகமூட்ட ‘ரொம்ப சில்லான பேபி’ என வெரைட்டியான பாடல்கள் அணிவகுக்க ‘என்ட்ட மோதாத காணா போய்டுவ’ பாடல் ஆட்டம்போடத் தூண்டுகிறது; கூடவே ‘தக்ஸ்’ படஅம்மன் பாடலை கொஞ்சம் நினைவூட்டுகிறது.
காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கிறது கதிரவனின் ஒளிப்பதிவு!
முன்பே காண்பிக்கப்பட்ட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருப்பது சலிப்பு.
கதை, திரைக்கதையில் தனித்துவம் இருந்திருந்தால் விக்ரம் பிரபுவின் நடிப்புப் பயணத்தில் இந்த படம் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கும். அடுத்தடுத்த படங்கள் அந்த வாய்ப்பைத் தர வாழ்த்துகள்!