ரயில் சினிமா விமர்சனம்

‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ ஒருபடி மேலேபோய் ‘வடக்கனை குடும்பத்தில் ஒருவனாகவே சேர்த்துக் கொள்ளும்’ என கருத்து சொல்லிவிட்டு, அதே தமிழனை குடிகாரனாக, உதவாக்கரையாக, திருடனாக காட்ட முயற்சித்திருக்கும் படைப்பு.

அந்த கிராமத்து இளைஞனுக்கு, தான் குத்தகைக்கு வசிக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் வட மாநில தொழிலாளி மீது எப்போதும் ஒருவித எரிச்சல். காரணம், அவன் தன் மனைவியுடன் நெருக்கமாகப் பழகுதுவது. ஒரு கட்டத்தில் அந்த எரிச்சல் உச்சத்துக்கு போக அவனை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வருகிறான். அந்த முடிவு அவனுக்கு தரும் கஷ்ட நஷ்டங்களே திரைக்கதை… இயக்கம் இதுவரை எழுத்தாளராகவும், சினிமா சீரியல் வசனகர்த்தாவாகவும் பயணித்து கவனம் ஈர்த்த பாஸ்கர் சக்தி

கிட்டத்தட்ட குடிப்பதை மட்டுமே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிற இளைஞன் கதாபாத்திரத்துக்கு தோற்றத்தால் பொருந்தி, அதற்கேற்ற நடிப்பையும் தந்திருக்கிறார் குங்குமராஜ்.

அவரின் நண்பனாக, எலும்பும் தோலுமாக நிஜமான குடிநோயாளி போலிருக்கிற ரமேஷ் வைத்யா நண்பனை குடிக்கத் தூண்டுகிற, தானும் சேர்ந்து குடித்து போதையில் மிதக்கிற காட்சிகளில் தனித்துவம் எதுவுமின்றி நடித்திருக்க,

குடிகார கணவனால் துன்பங்களை அனுபவித்து, அதற்கான இளைப்பாறுதலாய் வடமாநில இளைஞனுடன் பாசமாய் பழகுகிற பாத்திரத்தில் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் வைரமாலா.

வட மாநில இளைஞனாக வருகிற பர்வேஸ் (நிஜமாகவே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்), வைரமாலாவின் அப்பாவாக வருகிற செந்தில் கோச்சடை, வட மாநில இளைஞனின் உறவினர்களாக வருகிறவர்கள் என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பில் குறையில்லை.

வட மாநில இளைஞன் இறந்துபோக அந்த சடலத்தை உறவினர் வரும்வரை ஜி ஹெச்சில் வைக்காமல், அவன் வாடகைக்கு வசித்த வீட்டில் கொண்டு வந்து வைக்கும் காட்சி இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்?’ என்ற எண்ணத்தை உருவாக்க, அவனது மரணத்துக்கு ஊரே அழுதுவடிவது என நீளும் காட்சிகள் செயற்கையிலும் செயற்கையாய் கடந்து போகிறது.

படத்தின் பல காட்சிகள் துளியும் உயிரோட்டமில்லாமலிருக்க, தன் இசையால் முடிந்தவரை சுவாசம் தந்திருக்கிறார் எஸ் ஜெ ஜனனி. ‘பூ பூக்குதே’ பாடல் இனிமை!

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு வழக்கம்போல் தரம்.

இயல்புக்கும் யதார்த்தத்துக்கும் ஒத்துப்போகிற மனதைத் தொடுகிற மிகச்சில காட்சிகளோடு, இயல்புக்கும் யதார்த்தத்துக்கும் கொஞ்சமும் ஒத்துப்போகாத பல காட்சிகளோடு, புதுமுகங்களின் நடிப்பில் ஒரு படத்தை பார்க்க உங்களுக்கு ஆர்வமுண்டா? ஆம் என்பவர்கள் மட்டும் இந்த ரயிலில் ஏறலாம்.

ரயில் – திரைக்கதையில் ஃபெயில்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here