‘ரணம்’ சினிமா விமர்சனம்

தொடர் கொலைகள், அதன் பின்னணி என பரபரக்கும் வழக்கமான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் ‘ஒரு மாதிரி’யான வில்லங்க விபரீதத்தை இணைத்துப் பிணைத்து ஜனங்களின் கவனத்தைக் கவர முயற்சித்திருக்கிற ‘ரணம்.’

வெட்டப்பட்டு எரிக்கப்பட்ட கைகள், அதேபோல் எரிக்கப்பட்ட கால்கள், அதேபோல் உடல், அடுத்ததாக தலை… இப்படி உறுப்புகளும் உடலும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் கிடைக்க காவல்துறை விசாரணையில் இறங்குகிறது.

சிதைந்த முகத்தைப் பார்த்து சம்பந்தபட்ட நபரின் முகத்தை மிகச்சரியாக வரைவதில் தேர்ந்த நாயகன் வைபவ் போலீஸுடன் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

துப்பறிந்ததில் கிடைக்கும் விவரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகின்றன. அதில் முகஞ்சுளிக்க வைக்கும் விஷயமொன்றும் இருக்கிறது…

அது என்ன மாதிரியான விஷயம்? கொலைகளுக்கான காரணமென்ன? குற்றவாளி யார்? தடதடக்கிறது ரணத்தின் திரைக்களம்… இயக்கம் ஷெரீஃப்

முக சீரமைப்பு வரைகலை நிபுணராக, தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத புதிய கதாபாத்திரத்தில் வைபவ். இதுவரை நகைச்சுவையில் ஊறிப்போனவர் தனது இந்த 25-வது படத்தில் சீரியஸ் ஏரியாவுக்குள் புகுந்து புறப்பட்டிருப்பது தனித்துவம்.

சிதைந்த, எரிந்த முகங்களை வைத்து நிஜ உருவத்தை வரைவது, காவல்துறை உயரதிகாரி ரேஞ்சுக்கு குற்றவாளிகளைக் கண்டறிவதில் சுறுசுறுப்பையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுவது என துடிப்பான நடிப்பால் படம் நெடுக நிறைந்திருக்கிறார்; அவ்வப்போது குடித்திருக்கிறார்.  ‘உண்மை தனக்கான நீதியைத் தானே தேடிக்கொள்ளும்’ என அவர் பேசும் வசனம் ஈர்க்கிறது.

அவரை உடலிலுள்ள ஒரு பிரச்சனையால் திடுதிப்பென நினைவு மறந்துபோய், தனக்கு எதிரில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியாத அளவுக்கு மாறிப் போகிறவராக சித்தரித்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

நாயகி தான்யா ஹோப்பின் நெகுநெகு உயரம் அவர் ஏற்றிருக்கும் காவல்துறை உயரதிகாரி பாத்திரத்துக்கு கம்பீரம் தர, செழுமைக்குப் பஞ்சமில்லாத இளமையும் சதைப்பிடிப்போடு துடிக்கும் இதழ்களும் இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்றுவதில் போட்டி போடுகின்றன. அம்மணி நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

விபத்தில் சிக்கி போஸ்ட் மார்ட்டத்துக்கு போய்விட்ட தன் மகளுக்கு உயிர் இருப்பதாக கருதி, கதறும்போது நெகிழ வைக்கிறார் நந்திதா ஸ்வேதா. அருவருப்பான குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், அவர்களை அலற விடுவதுமாய் நீள்கிற காட்சிகளுக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

இன்னபிற பாத்திரங்களில் சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, சடலங்களுடன் சல்லாபிக்கிற (Necrophilia) இருவர் என அத்தனை பேரின் பங்களிப்பும் கச்சிதம்.

பாலாஜி கே ராஜாவின் கேமரா கிரைம் திரில்லர் கதைக்களத்தை சுருட்டிய விதம் திருப்தியைத் தர, அரோல் கரோலியின் பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு உதவியிருக்கிறது.

சின்னச்சின்ன திருப்பங்கள் இருந்தாலும் அது திரைக்கதைக்கு போதிய போஷாக்கை தராததால் ரணம் சாதாரணமாகியிருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here