பள்ளிக்கால நினைவுகளை தட்டியெழுப்புகிற படங்களின் வரிசையில் இன்னொன்று… ‘தனியார் பள்ளிகளில் மட்டும்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு, அரசுப் பள்ளிகளை கேலியாகப் பார்ப்பது ரொம்பவே ராங்’ என கருத்து சொல்லியிருக்கிற ‘ரங்கோலி.’
அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சத்யா, சக மாணவர்களுடன் ஏற்படும் சிறுசிறு ஈகோ உரசல்களால் கட்டிப்புரள்கிறான். பள்ளிக்கூடம் அவ்வப்போது போர்க்களமாகிறது. மாணவர்களுக்குள் அப்படியான சண்டைச் சச்சரவுகள் சகஜம்தான் என்றாலும், அவனுடைய அப்பா ‘மகனுடைய சேர்க்கை சரியில்லாததால்தான் அப்படி நடந்து கொள்கிறான்’ என்று நினைக்கிறார். அவனை தனியார் பள்ளியில் சேர்த்தால் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவான் என்று நம்புகிறார். பெரியளவில் பணம் கடன் வாங்கி மகனை தனியார் பள்ளியில் சேர்க்கிறார். அங்கு சேர்ந்தபின் அவனது படிப்பின் தரம் உயர்ந்ததா இல்லையா என்பது கதையோட்டம்… இயக்கம் வாலி மோகன்தாஸ்
சத்யாவாக புதுமுகம் ஹமரேஷ். (படத் தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் பேரன். இயக்குநர் விஜய், நடிகர் உதயா இருவருடைய சகோதரியின் மகன்) ஏற்றிருக்கும் பள்ளி மாணவன் கதாபாத்திரத்துக்கு மிகச் சரியாக பொருந்தியிருக்கிறார். அரசுப் பள்ளியில் நண்பர்களுடன் உற்சாகமாக வலம் வருவது, தனியார் பள்ளியில் தன்னை சக மாணவர்கள் ‘லோக்கல்’ என குறிப்பிட்டு சீண்டும்போது மனம் உடைவது, தன்னை தரம் தாழ்த்தி பேசியவர்களின் மண்டையை பிளக்க சீறிப்பாய்வது, மீண்டும் தான் விரும்பிய உற்சாக மனநிலைக்குத் திரும்புவது என அந்த கலைக் குடும்பத்து வாரிசின் நடிப்புப் பங்களிப்பு மதிப்பெண்களை தாராளமாய் அள்ளிக் கொடுக்கும்படி அத்தனை தரம்!
அப்பாவாக ‘ஆடுகளம்’ முருகதாஸ். சலவைத் தொழிலாளி, வெளுத்த துணிகளைப் போன்ற சுத்தமான மனதுக்குச் சொந்தக்காரன், மனைவி மகன் மகள் மீது நேசம், மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னேற்றி அழகு பார்க்கத் துடிக்கும் வேகம் என எளிமையான குடும்பஸ்தன் கதாபாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார். மகன் தப்பு செய்யும்போதெல்லாம் பள்ளியின் முதல்வரிடம் கூனிக்குறுகி மகனுக்கான பரிந்து பேசி மன்னிப்பு கேட்பது, தன் தகுதிக்கு மீறி கடன் வாங்குவது, அதை கட்டமுடியாமல் தவிப்பது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். ‘உத்தமர் காந்தி’ என்ற அவரது கதாபாத்திரப் பெயரும் ஈர்க்கிறது!
தமிழாசிரியராக வருகிற அமித் பார்கவ் மாணவர்களை அணுகுகிற முறையும், கண்டிப்பும், ஊக்குவிப்பும் ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு!
மாணவ மாணவிகளிடையே காதல் அரும்புகிற காட்சியும் படத்தில் உண்டு. அந்த காட்சிகளுக்கு தன் மெல்லிய உணர்வுகளாலும் மிதமான புன்னகையாலும் உயிரோட்டம் தந்திருக்கிறார் பிரார்த்தனா சந்தீப்.
மாணவ மாணவிகளாக, ஆசிரியர் ஆசிரியைகளாக வருகிறவர்களின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம்!
நாயகனுக்கு அம்மாவாக வருகிற சாய்ஸ்ரீ பிரபாகரன் அவசியமிருக்கிறதோ இல்லையோ காச்மூச்சென கத்திக் கொண்டேயிருக்கிறார். அக்காவாக வருகிற அக்ஷயாவின் நடிப்பு நேர்த்தி.
வட்டிக்கு கடன் கொடுப்பவரை நல்லவராக காட்டியிருப்பது தனித்துவம்!
வசதியான வீட்டுப் பிள்ளைகள் தாங்கள் படிக்கும் பள்ளியில் எளிய குடும்பத்திலிருந்து ஒரு மாணவன் வந்து இணைந்தால் அவனை எப்படி பார்ப்பார்கள், எப்படியெல்லாம் நடத்துவார்கள், நடந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் விரிவாக காட்சிப்படுத்தி, பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஒழியவில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
கதைப்படி, கதையின் நாயகனுக்கு அரசுப் பள்ளியில் கிடைத்த உற்சாக மனநிலை தனியார் பள்ளியில் கிடைக்கவில்லை; அதனால் அவன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த விஷயத்தை அதன் தன்மையோடு படம் பார்ப்பவர்களுக்கு கடத்த நினைத்தது தவறில்லை. அதற்காக தனியார் பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்நேரமும் ஒருவித கலவரச் சுழலை உருவாக்கும் மனநிலையுடன் சுற்றிக் கொண்டிருப்பது, அப்படி திரும்பினால் கலாட்டா, இப்படி திரும்பினால் அடிதடி என மாணவர்கள் மோதிக்கொள்கிற ஒரேவிதமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டிருப்பது சலிப்பு!
கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையில் வயலினும் புல்லாங்குழலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. அந்த மெல்லிசையோடு படம் நெடுக பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டேயிருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறது.
‘பெற்றோர் தங்களது விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்’, ‘பிள்ளைகள் எங்கு உற்சாகமாக படிக்கிறார்களோ அங்கேயே படிக்க அனுமதியுங்கள்,’ ‘தனியார் பள்ளிகளில்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்’, ‘படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்’, ‘தகுதிக்கு மீறி கடன் வாங்கி வாழ்க்கையில் நிம்மதியிழக்காதீர்கள்’ என பல அறிவுரைகள் ரங்கோலி முழுக்க கொட்டிக் கிடக்கிறது. தேவையென்போர் எடுத்துக் கொள்ளுங்கள்.
ரங்கோலி – அட்வைஸ் அன்லிமிடெட்