சாந்தமான இளைஞனுக்கும், சைக்கோ போலீஸுக்குமான மோதலே சாந்தகுமாரின் ‘ரசவாதி.’
மலைப் பிரதேசத்தில் தானுண்டு தன் சித்த மருத்துவம் உண்டு என தனிமையில் வசித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். ஒரு கட்டத்தில் அவரது மனதுக்கு இதம் தர ஒரு பெண் வந்து சேர்கிறாள். அவளோடு காதலும், வழக்கமான கடமையுமாக நாட்கள் நல்லபடியாக நகர்கிறது.
‘அப்படியெல்லாம் உன்னை நிம்மதியாக விட்டுவிட முடியாது’ என அர்ஜுன்தாஸுக்கு எதிராக களமிறங்குகிறார் அந்த பகுதிக்கு புதிதாய் பொறுப்பேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தருகிற தொல்லைகளால், தாக்குதல்களால் சின்னாபின்னமாகிறது அர்ஜுன்தாஸின் வாழ்க்கை. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதையின் தொடர்ச்சி… அந்த தொடர்ச்சியில் இன்ஸ்பெக்டருக்கும் அர்ஜுன்தாஸுக்கும் என்ன சம்பந்தம்? அர்ஜுன்தாஸ் மீது இன்ஸ்பெக்டர் கொலைவெறியோடு பாய்வதற்கு காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பதில் இருக்கிறது.
சித்த மருத்துவர்களை எப்படி எப்படியோ பார்த்து பழகிய நமக்கு, அந்த வேடத்தில் ஒரு இளைஞனைப் பார்ப்பது வித்தியாசம் என்றால், வில்லனாகவே பார்த்து பழகிய அர்ஜுன்தாஸை அப்படியான பாத்திரத்தில் கதையின் நாயகனாக பார்ப்பது புது அனுபவம். மருத்துவப் பணியை அதற்குண்டான பொறுமையோடும் பொறுப்போடும் தொடரும் அர்ஜுன் தாஸ், ஆக்சன் காட்சிகளில் அளவோடு சீற்றம் காட்டி, போலீஸிடம் அடிபட்டு ரத்தம் சிந்தும்போது பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். முன் கதையில் ஒருவர், நிகழ்காலத்தில் வேறொருவர் என இரண்டு ஜோடிகள் கிடைக்க, அதற்கேற்ப கெமிஸ்ட்ரியை பகிர்ந்து பரிமாறியிருக்கிறார்.
கதாநாயகனின் காதலியாக வருகிற ரேஷ்மா வெங்கடேஷின் ஹோம்லி லுக்கும் மலர்ந்த புன்னகையும் மனம் நிறைக்கிறது. அவருக்கு நேரும் சம்பவங்கள் பகீர் திகீர் எபிசோடுகள்.
இன்னொரு காதலியாக வருகிற தான்யா ரவிச்சந்திரன், கதைக்கேற்ப முகத்தில் மென் சோகத்தை தவழ விட்டிருந்தாலும் மயிலிறகால் வருடுவது போன்ற ரொமான்ஸில் கவர்கிறார்.
இன்ஸ்பெக்டராக சுஜித் சங்கர். தன் அப்பாவின் கொடூர குணத்தைப் பார்த்துப் பார்த்து சைக்கோ மனநிலைக்கு மாறிப்போனவராக தந்திருக்கும் நடிப்புப் பங்களிப்பில் குரூரத்தின் உச்சத்தை தொட்டுத் திரும்புகிறார்.
படு சீரியஸான இந்த கதையில், வி ஜே ரம்யா சைக்கோ போலீஸிடம் மாட்டிக் கொண்டு படும் அவதிகள் கலகலப்பூட்டுகிறது.
இன்ஸ்பெக்டரின் அப்பாவாக சில நிமிடங்களே வந்தாலும், மனைவியைக் கொடுமைப்படுத்துவதில் அருள் டி சங்கர் தந்திருப்பது வீரியமான வில்லத்தனம்.
ஜி எம் சுந்தர், ரிஷிகாந்த், தீபா என இன்னபிற நடிகர்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரங்கள் வாய்த்திருக்கின்றன.
தமன் இசையில் ‘சாரல் சாரல்’ பாடலில் மனம் குளிர்கிறது. பாடல் வரிகளற்ற பரத ஜதியிசை படம் முடிந்தபின்னும் செவிகளைப் பிரிய மறுக்கிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
கதையில் பெரிதாய் புதுமையில்லாவிட்டாலும் ‘மெளனகுரு’, ‘மகா முனி’ பட இயக்குநரின் திரைக்கதையிலிருக்கும் சுறுசுறுப்பும், திருப்பங்களும் அங்குமிங்கும் அசையவிடாமல் கட்டிப் போடுகிறது.
ரசவாதி, சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரில் புதுவிதி!