பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை நினைத்து பெருமிதப்படுகிற விதத்தில் ஒரு படம்.
பத்திரிகையாளன் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என எடுத்துக் காட்டியிருக்கும் படம்.
புலனாய்வுப் பத்திரிகையாளன் எப்படி செயல்பட வேண்டும், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பது எப்படி இருக்க வேண்டும் என பாடம் நடத்தியிருக்கும் படம்.
தலைப்பில் ‘ரத்தம்’ என்றிருந்தாலும், சமீபகாலமாக வெளிவருகிற ரத்தச் சகதியில் குளிப்பாட்டி அனுப்புகிற படங்களைப் போல் வன்முறைக் காட்சிகளை அளவுக்கதிகமாய் கொட்டிக் குவிக்காத படம்.
‘ ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2′ ஆகிய படங்களை இயக்கி, மக்களைச் சிரித்து ரசிக்கச் செய்த இயக்குநரிடமிருந்து இப்படியொரு படமா?’ என ஆச்சரியப்பட வைக்கும் படம்.
பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதை இயல்பாக கொண்ட விஜய் ஆண்டனிக்கு பொருத்தமான படம்.
நடிகை மஹிமா நம்பியாரின் நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படம்.
நேர்மையான புலனாய்வுப் பத்திரிகையாளர், துணிச்சல் மிக்கவர், செய்தி சேகரிப்புக்காக சவால்கள் பலவற்றை சந்தித்தவர், செய்தி சேகரிப்புக்காக ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர், பத்திரிகையாளனாக வெளிநாடுகளுக்கும் போய் வந்தவர், வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்காகவும் கட்டுரைகள் எழுதியவர், தான் எழுதிய தனித்துவமான புத்தகங்களாலும் பத்திரிகையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இப்படி பல அடையாளங்களுக்கும் பெருமைகளுக்கும் சொந்தக்காரர் ரஞ்சித் குமார். அவர் தன் பணிகளில் இருந்து விலகி, கொல்கத்தாவில் தன் மகளுடன் வசித்து வருகிறார். முகம் தெரியாத அளவுக்கு தாடி மீசை வளர்ந்துபோய், மது போதைக்கு அடிமையாகி வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நிலையில் அவர் மீது அக்கறையுள்ள, அவர் எடிட்டராக பணிபுரிந்த பத்திரிகையின் எம் டி அவரை சந்திக்கிறார். மீண்டும் பணியில் சேரச் சொல்லி அழைக்கிறார்.
அதையடுத்து, நாடறிந்த பத்திரிகையாளனாக இருந்தும், அந்த அடையாளங்களை அங்கீகாரங்களை காட்டிக் கொள்ளாமல் புதிதாக சேர்பவரைப் போல் பணியில் இணைகிறார்.
கொஞ்ச நாள் முன் அந்த பத்திரிகை அலுவலகத்தில் வைத்து, சக பத்திரிகையாளர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கையிலெடுக்கிறார். குற்றவாளி யார், குற்றத்துக்கான காரணம் என்ன என்பதெல்லாம் முன்பே வெளியுலகத்துக்கு தெரிந்திருந்தாலும் அது தவறு என அவரது புலனாய்வு மூளை சொல்கிறது. ‘உண்மையில் நடந்தது என்ன?’ என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்; களமிறங்குகிறார்.
அந்த அலுவலகத்தில் நடந்தது போல் முன்பே சில கொலைகள் நடந்துள்ளதை, அடுத்தடுத்தும் நடக்கவிருப்பதை அறிகிறார். உயிர் பறிபோகிற அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடந்த கொலைகளுக்கான காரணம், பின்னணியில் இருப்பவர்கள் என பலவற்றைக் கண்டுபிடிக்கிறார்.
அவர் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது… குற்றவாளிகளை கண்டுபிடித்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு நிறுத்துவதில் பல தடைகள்… அவற்றை எப்படி முறியடிக்கிறார் என்பது திரைக்கதையோட்டம்… இயக்கம் சி.எஸ். அமுதன்
புலனாய்வுப் பத்திரிகையாளனாக விஜய் ஆண்டனி. குடிக்கு அடிமையாகி விரக்தியில் நாட்களை கடத்துவது, மீண்டும் பணியில் சேர்ந்தபின்னும் குடியிலிருந்து மீள முடியாமல் தவிப்பது, தன் நண்பனின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதிக்கு வந்தபின் பத்திரிகை அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆளுமையுடன் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவது, புலனாய்வில் பரபரப்பு கூட்டுவது என தான் ஏற்ற கனமான பாத்திரத்துக்கு தனது வழக்கமான அலட்டிக் கொள்ளாத நடிப்பால் 100% உயிரூட்டியிருக்கிறார்.
இதுவரை ஏற்காத பாத்திரத்தில் மஹிமா நம்பியார். பேச்சில் தெனாவட்டு காட்டி, கண்களால் மிரட்டி தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என காண்பித்திருக்கிறார்.
யாருடைய அச்சுறுத்தல்களைக் கண்டும் பயப்படாமல் நேர்மையாக பத்திரிகை நடத்துகிற பத்திரிகை அதிபராக நிழல்கள் ரவி. அனுபவ நடிப்பால் தன் பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
புலனாய்வுப் பத்திரிகை ஆசிரியராக கம்பீரமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற நந்திதா ஸ்வேதா தந்திருக்கும் நடிப்பில் தேவையான துடிப்பு இருக்கிறது.
குற்றச் செயல்களில் ஊறிப்போன காவல்துறை உயரதிகாரியாக உதயபானு மகேஷ்வரன். ஒரு கட்டத்தில் சட்டத்தின் பிடியில் சிக்கும்போது எப்படி தப்பிப்பது என புரியாமல் அல்லாடும்போது அவரது நடிப்பு கவர்கிறது.
தனித்து தெரியும்படியான பாத்திரத்தில் ரம்யா நம்பீசன், விஜய் ஆண்டனியின் பெருமைகள் புரிந்து அவரது புலனாய்வுப் பணிக்கு உறுதுணையாக நிற்கிற அந்த சக பத்திரிகையாளர், காவல்துறை அதிகாரியாக வருகிற ஜான் மகேந்திரன், விஜய் ஆண்டனிக்கு மகளாக வருகிற அந்த கியூட்டான சிறுமி என படத்தில் பரிச்சயமான பரிச்சயமாகாத ஏகப்பட்ட நடிகர், நடிகைகள்… யாரையுமே வீணடிக்காமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது அழுத்தமான திரைக்கதை. ஒயின்ஷாப் பார் ஒன்றில் சப்ளையராக வருகிற ஆதித்யா கதிருக்குகூட கதையோட்டத்தில் முக்கியத்துவம் இருக்கிறது.
வேகமெடுத்தோடும் காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் தீமூட்டியிருக்கிறார் கண்ணன் நாராயணன்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் தரம் அதிகம்.
கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிப்பது, கொலைகளுக்கு காரணமானவர்களை நெருங்கத் திட்டமிடுவது, அந்த திட்டத்தை ஹேக்கிங் அதுஇதுவென தொழில்நுட்பத்தின் துணையோடு செயல்படுத்துவது என காட்சிகளில் விறுவிறுப்புக்கு குறையில்லை. விஜய் ஆண்டனி குதிரையில் பறக்கும் அந்த நிறைவுக் காட்சி சிங்கப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது.
‘இதெல்லாம் சாத்தியமா?’ என்று மனதுக்குள் கேள்வியை உருவாக்குகிற சினிமாத்தனமான காட்சிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கிரைம் திரில்லர் ஜானரில் புது ‘ரத்தம்’ பாய்ச்சியிருப்பதற்காக விஜய் ஆண்டனி – சி.எஸ். அமுதன் கூட்டணியை தூக்கி வைத்துக் கொண்டாடலாம்!