ரஸாக்கர் சினிமா விமர்சனம்

சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இந்திய மக்கள் வெள்ளையர்களால் அனுபவித்த கொடுமைகள், உயிரிழப்புகள், ஓடிய ரத்த ஆறு என எல்லாமும் எல்லோருக்கும் தெரியும்.

சுதந்திரம் கிடைத்தபின்னும் அதேபோன்ற கொடுமைகள் இந்த மண்ணில் நடந்த வரலாற்றை ரத்தமும் சதையுமாக எடுத்துச் சொல்லியிருக்கிற படம் இது.

இந்தியாவுக்கு வெள்ளையர்களிடமிருந்து 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில், காலம் காலமாக ஹைதராபாத்தை ஆள்கிற நிஜாம் பரம்பரை வழிவந்த மன்னர் மிர் அஸ்மான் அலிகான், தன் ஆளுமைக்கு உட்பட்ட ஹைதராபாத் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டுக்கு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத் சமஸ்தானத்தை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

அங்குள்ள இந்துக்களை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்கிறார். இஸ்லாமிய மக்கள் பேசுகிற மொழியை மட்டுமே பேச வேண்டும் என வற்புறுத்துகிறார். இந்து மத சடங்குகள், வழிபாட்டுக்கு தடை விதிக்கிறார். ஒத்துக் கொள்ளாதவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு கொடூரம் நடப்பதையறிந்து உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் மனம் வருந்துகிறார்; கொதிப்படைகிறார். மக்களை மன்னரிடமிருந்து காப்பாற்றுவதோடு, ஹைதராபாத் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதன் விளைவுகள் என்ன என்பதே கதை… இயக்கம் யதா சத்யநாராயணா

ஹைதராபாத் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அறிந்து மனம் கலங்குவது, நிஜாம் மன்னரின் அராஜகத்துக்கு முடிவு கட்ட திட்டம் தீட்டுவது, சரியான தருணம் பார்த்து ராணுவப் பாய்ச்சல் நிகழ்த்துவது என வலிமையான நடிப்பைத் தந்திருக்கிறார் வல்லபாய் படேலாக வருகிற தேஜ் சப்ரூ.

அரண்மனையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பிக்கிற வேலைதான் என்றாலும் கண்களிலும் உடல்மொழியிலும், கொலைவெறியைக் காட்டியிருக்கிறார் நிஜாம் மன்னராக வருகிற மக்ரந் தேஷ்பாண்டே.

மக்களை ஈவிரக்கமின்றி கொன்றழிக்கிற ரஸாக்கர் குழுவின் தலைவனாக வருகிற ராஜ் அர்ஜுனின் நடிப்பு மிரட்டுகிறது.

அரக்கர்களாக செயல்படுகிற ரஸாக்கர்களை எதிர்க்கிற போராளிகளாக சந்த்நாத் நாயர், அனுசுயா, இந்திரஜா என நிறையப் பேர்… அவர்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான பாபி சிம்ஹா, வேதிகா, டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி உள்ளிட்டோரும் உண்டு. அத்தனைப் பேரும் உடல் பொருள் ஆவி அனைத்தையும் வருத்திக்கொண்டு மிகமிக தரமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

தனித்துத் தெரியும்படியான இந்திய தேசத்தின் முக்கியமான கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் தலைவாசல் விஜய். ஜான் விஜய்க்கும் முக்கியமான பாத்திரம் கிடைத்திருக்கிறது.

இவர்களைத் தவிர பெரிதாய் பட்டியல் போடுகிற அளவுக்கு ஏராளமான நடிகர், நடிகைகளின் பங்களிப்பையும் பெற்றிருக்கிறது கதைக்களம். அந்த கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகைகளின் தேர்வும், அவர்களின் பொருத்தமான நடிப்பும்,

ரமேஷ் குஷேந்தரின் ஒளிப்பதிவும், பீம்ஸின் பின்னணி இசையும் படத்துக்கு அசுர பலம் சேர்த்திருக்கிறது.

மக்கள் கூட்டம் கூட்டமாக தாறுமாறாய் வெட்டப்பட்டும் சுடப்பட்டும் கொல்லப்படுவது, நூற்றுக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் ஒரே மரத்தில் தூக்கிலிட்டு கொல்வது, பெண்களை குறிப்பாக சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது, பசுக்களை வெட்டிக் கொன்று குடல்களை தோரணமாக தொங்க விடுவது, பச்சிளங் குழந்தைளையும் விட்டு வைக்காமல் உயிர் பறிப்பது என படம் முழுக்க நீளும் காட்சிகள் மனதை உலுக்காமல் விடாது. மென் மனதுக்காரர்களால் எதையுமே பார்க்க முடியாது.

வரலாற்றை அப்படி இப்படி மாற்றியது போலிருந்தாலும், இந்த காலகட்டத்தில் இப்படியான ஒரு படம் தேவையா என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும், உருவாக்கத்திலிருக்கும் பிரமாண்டம், உழைப்பு என அத்தனையுமே ஆச்சரியப்பட வைக்கிறது.

ரஸாக்கர் ஒரு தரப்புக்கு விஷம்; இன்னொரு தரப்புக்கு அமிர்தம்!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here